பெருநகரத்து பெண்ணொருத்தியின் ’ஆட்டோகிராஃப்’
‘ஓ மஞ்சு’, ‘அழியாத கோலங்கள்’, ’பன்னீர் புஷ்பங்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘துள்ளுவதோ இளமை’ உட்படச் சில திரைப்படங்கள் தமிழில் பதின்ம பருவத்து பாலியல் ஈர்ப்பினைப் பேசியிருக்கின்றன. ‘ஆட்டோகிராஃப்’, ‘வாரணம் ஆயிரம்’ போன்ற சில படங்கள் ஒரு ஆண் தன் வாழ்வில் சந்தித்த சில பெண்களைப் பற்றிப் பேசியிருக்கின்றன.
’அவள் அப்படித்தான்’ போன்ற படங்கள் எழுபதுகளின் இறுதியில் வெளியானாலும், ஒரு பெண் தனது வாழ்வில் சந்தித்த ஆண்களைக் குறித்த ‘ஆட்டோகிராஃப்’ கதைகள் பெரிதாகத் தமிழில் வரவில்லை. குறிப்பாக, 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு சென்னை போன்ற பெருநகரமொன்றில் வாழ்கிற ஒரு நடுத்தரக் குடும்பத்து பெண்ணின் பார்வை என்ன என்பது பெரிதாக விளக்கப்படவில்லை.
அப்படியொரு பெண்ணொருத்தியின் பார்வையை முன்வைக்கிறது வர்ஷா பரத் இயக்கியுள்ள ‘பேட் கேர்ள்’. வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் தயாரித்துள்ள இப்படத்திற்கு அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார்.
அஞ்சலி சிவராமன், சாந்திப்ரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ருது ஹாரூண், டீஜே அருணாச்சலம், சஷாங் பொம்மிரெட்டிபல்லி உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
‘பேட் கேர்ள்’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டது?
தடைகளை உடைத்து..!

பாட்டி, அம்மா, அப்பா விதிக்கிற கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து வருகிறார் பதினைந்து வயது பெண்ணான ரம்யா (அஞ்சலி சிவராமன்). அந்த கட்டுப்பாடுகளை அடக்குமுறையாக உணரும் அப்பெண், அவற்றை உடைக்க முயற்சிக்கிறார்.
பள்ளிப் பருவச் சுற்றுலாவின்போது உடன் படிக்கும் ஒரு மாணவன் உடன் ஒரு இரவு முழுவதையும் செலவிடுகிறார். அந்த மாணவனின் பெயர் நளன் (ஹ்ருது ஹாரூண்). அது, தோழிகளை அவரிடம் இருந்து விலக்கி வைக்கிறது.
அதே பள்ளியில் ஆசிரியாக இருந்து வருகிறார் ரம்யாவின் தாய் சுந்தரி (சாந்திப்ரியா).
ஒருநாள் பூட்டப்பட்ட வகுப்பறையொன்றில் ஒரு மாணவனும் மாணவியும் தனியாக இருப்பதைக் காண்கிறார் சுந்தரி. அவர்களைத் தலைமையாசிரியையிடம் அழைத்துச் செல்கிறார்.
அப்போது, சுந்தரி டீச்சரை அவமானப்படுத்தும் நோக்கில் ‘ரம்யா – நளன்’ உறவு பற்றி அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியேறி நளன் உடன் செல்லவும் தயாராகிறார் ரம்யா. ஆனால், அது அவரது தந்தைக்குத் தெரிய வருகிறது.
அந்த நிகழ்வு ரம்யா வீட்டில் பூகம்பத்தை ஏற்படுத்துகிறது.
வேறொரு பள்ளியில் அவசர அவசரமாகச் சேர்க்கப்படுகிறார் ரம்யா. அப்போது, ‘நல்லா படிச்சு, ஒரு வேலையில சேர்ந்துட்டு, வெளிநாட்டுக்குப் போய் நீ நினைக்கறதை எல்லாம் பண்ணு’ என்கிறார் தாய் சுந்தரி.
ஆனால், ரம்யாவுக்கோ அது அடக்குமுறையின் இன்னொரு வடிவமாகத் தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து, ‘இனி என் இஷ்டம் போலத்தான் வாழ்வேன்’ என்று முடிவு செய்கிறார்.
இருபதுகளில் அர்ஜுன் (சஷாங்), முப்பதுகளில் இர்பான் (டீஜே அருணாச்சலம்) என இரண்டு ஆண்களோடு நெருங்கிய உறவில் இருக்கிறார் ரம்யா.
அந்த வாழ்க்கையில் இருந்து ரம்யா பெற்றது என்ன? தன்னிஷ்டம் போல வாழ்வதில் அவர் திருப்தியைக் கண்டாரா?
சமூகம் அவரை எப்படிப் பார்க்கிறது? அவர் சமூகத்தை எப்படிப் பார்க்கிறார்? இறுதியில் அவரது வாழ்வு என்னவானது என்று சொல்கிறது ‘பேட் கேர்ள்’ மீதி.
சில மாதங்களுக்கு முன்னர் ’பேட் கேர்ள்’ டீசர் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பைச் சம்பாதித்த நிலையில், தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
’தடைகளை உடை’ என்று நினைக்கிற ஒரு பெண் தனது பதின்ம வயதில் கைக்கொள்கிற எண்ணங்கள், முப்பதுகளிலும் அப்படியே இருக்கிறதா என்பதைச் சொன்ன வகையில் வித்தியாசமான திரையனுபவத்தைத் தருகிறது ‘பேட் கேரள்’. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
நகைச்சுவை எங்கே..?

வெவ்வேறு காலகட்டங்களில் பலவிதமான அனுபவங்களை எதிர்கொள்கிற ‘கம்மிங் ஆஃப் ஏஜ்’ (coming of age) கதைகளில் நகைச்சுவை பிரதானமாக இருந்தால், ரசிகர்கள் எளிதாக அதனோடு தங்களைப் பொருத்திக் கொள்ள முடியும். ஏனோ, ‘ரொம்பவே’ சீரியசாக காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் வர்ஷா பரத்.
நாயகி கதாபாத்திரம் எதிர்கொள்கிற சமூக, அரசியல் முரண்களே இக்கதையில் நகைச்சுவையாகத் தெரிகின்றன. அதேநேரத்தில், அந்த காரணிகளை ஆதரிப்பவர்களுக்கு அது சிரிப்பைத் தராது; மாறாக, வலுவான எரிச்சலையே தரும்.
இவ்விரண்டையும் ’சீர்’ தூக்கி நோக்க முடிந்தால், ‘பேட் கேர்ள்’ நல்லதொரு முயற்சியாகத் தென்படும்.
நடிப்பைப் பொறுத்தவரை, நாயகி அஞ்சலி சிவராமனின் பங்களிப்பு அபாரம். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்கிற காட்சிகளில் அவர் வெறுமனே ஒரு பாத்திரமாக மட்டுமே நம் முன்னே ட் ஹெரியத் தூணை நின்றிருக்கின்றன அவரது ஒப்பனை, உடல்வாகு, உடல்மொழி, பாவனைகள்.
அவருக்கு இணையாக இப்படத்தில் நமக்குத் தெரிவது, அவரது தாயாக நடித்துள்ள சாந்திப்ரியா. வாட் எ கம்பேக்..! ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’னில் நாயகியா வந்தவர் இவர் என்று சொன்னால், அவரே கூட நம்பமாட்டார்.
ஹ்ருது ஹாரூண், டீஜே அருணாச்சலம், சஷாங்க் மூவருமே தாங்கள் ஏற்ற பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கின்றனர்.
செல்வியாக வருகிற சரண்யா ரவிச்சந்திரன், இப்படத்தில் கைத்தட்டல்கள் வாங்குகிற அளவுக்குச் சில இடங்களில் வசனங்களை உதிர்த்திருக்கிறார்.
நாயகியின் தோழிகளாக வந்தவர்கள், உறவினர்களாக நடித்தவர்கள், பள்ளிச்சூழலைச் சார்ந்தவர்கள் என்று சுமார் இரண்டு டஜன் பேராவது இதில் தலைகாட்டியிருப்பார்கள். அனைவருமே ‘பாந்தமாக’த் திரையில் தெரிகின்றனர்.
இப்படத்தின் காட்சியாக்கம் வழக்கத்திற்கு மாறானதாக உள்ளது. மிக முக்கியமாக கேமிரா கோணங்கள், நகர்வுகள் வித்தியாசமான திரையனுபவத்தைத் தருகின்றன.
ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகிய ஒளிப்பதிவாளர்கள் அதன் பின்னிருக்கின்றனர்.
‘நான் லீனியர்’ முறையில் கதை சொல்கிற உத்தியை இதில் கையாண்டிருக்கிறார் இயக்குனர். அது பெரிதாகக் குழப்பமின்றி திரையில் வெளிப்படுகிற வகையில் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்.
நாயகியைச் சுற்றியிருக்கிற உலகைச் சிறப்புறக் காட்டுகிற வகையில் உள்ளது சண்முகராஜாவின் தயாரிப்பு வடிவமைப்பு.
இந்த படத்தில் வருகிற கலைஞர்களின் ஒப்பனை யதார்த்தமாகவும் துருத்தலாகத் தெரியாத வகையிலும் உள்ளது; கலைஞர்கள் அணிந்து வரும் ஆடைகள் அந்தந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றன; காட்சியின் தன்மையை மறைப்பதாக இல்லை.
அது போன்ற அம்சங்கள் ஆடை வடிவமைப்பாளர் ஸ்ருதி மஞ்சரி, ஒப்பனைக்கலைஞர் பாவனா மோகனின் பங்களிப்பைப் பாராட்டச் செய்கின்றன.
ஒலி வடிவமைப்பு, டிஐ உள்ளிட்ட அம்சங்கள் இதில் சிறப்பாக இருக்கின்றன.
இந்த படத்தில் ‘அந்தரங்க’ காட்சிகள் சில வருகின்றன. அதற்காக, இதில் ஜெயலட்சுமி சுந்தரேசன் ‘இண்டிமசி கோஆடினேட்டர்’ ஆக இருந்திருக்கிறார்.
இப்படிப் பல பெண்கள் இப்படத்தில் பணியாற்றியிருக்கின்றனர்.
அமித் த்ரிவேதியின் பின்னணி இசை ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சிக்கு நம் மனம் இடம்பெயரக் காரணமாக விளங்குகிறது. பாடல்கள் ‘வைஃப்’ தரவல்ல ரகத்தில் உள்ளன.
ஒட்டுமொத்தமாக நோக்கினால், பெருநகரத்தில் வாழ்கிற எல்லா பெண்களும் எதிர்கொள்கிற காதலை, காமத்தைப் பற்றிப் பேசுவதாக இப்படம் இல்லை. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்வாகவும் இதனைக் கருத முடியாது, கருதக் கூடாது.
ஆதாம் – ஏவாள் கதையில் வருவது போல ‘தடை செய்யப்பட்டது’ என்று சொல்லப்படுபவற்றின் மீது ஈர்ப்பு கொள்கிற ஒரு பெண்ணின் ‘விடலைத்தனத்தை’ப் பேசுகிறது ‘பேட் கேர்ள்’. தனது அனுபவங்கள் வழியாக அப்பெண் பெற்ற ‘கற்றலையும்’ பேசுகிறது.
மிக முக்கியமாக, இதுவரை தனக்கு முன்னிருந்த தலைமுறைப் பெண்கள் அனுபவித்த அடக்குமுறைகளே தன் மீது ‘அடக்குமுறை’யாகத் திணிக்கப்பட்டதையும் அவற்றில் இருந்து வெளியேறுவதற்கான வழிகளை நோக்கி அவர்களே உந்தி தள்ளியதையும் அப்பெண் உணர்வதாகவும் காட்டியுள்ளது இப்படம்.
பள்ளியில் இருந்து நாயகியை வெளியேற்றியதும், வீட்டில் சண்டை நடக்கிற காட்சி அதற்கான உதாரணம். அப்போது, ‘இவ ஒழுங்கா இருந்தா இப்படி நடந்திருக்குமா’ என்று நாயகியின் தாயைக் குறை கூறும் பாட்டி பாத்திரம். ஒரு தலைமுறைப் பெண்கள் எடுத்து வைத்துள்ள அடுத்த அடி அந்தக் காட்சியில் உணர்த்தப்படும்.
கிளைமேக்ஸ் காட்சியில் ‘பாலியல் உறவு’ தாண்டித் தனது பொருளாதார சுதந்திரத்தைத் தேடி நாயகி செல்வதாகக் காட்டியிருப்பது இப்படத்தின் இன்னொரு சிறப்பு.
இப்படத்தைக் காணும்போது சில விவரங்கள் விடுபட்டதாக நாம் எண்ணக்கூடிய சூழல் ஏற்படும்; அதற்கான காரண காரியங்கள் படக்குழுவுக்கே வெளிச்சம்.
இக்கதையில் பலதரப்பட்ட ஆண் பாத்திரங்கள் வந்தபோதும், அவற்றைக் குறித்த தெளிவான விவரணைகள் திரைக்கதையில் இல்லை. அதேநேரத்தில் நாயகி, தாய், பாட்டி மற்றும் தோழிகள் பாத்திரங்கள் நம் மனதில் தெளிவான சித்திரத்தை உருவாக்குகின்றன.

இதுநாள் வரை திரையில் ‘ஆண் மைய’ கதை சொல்லல் நிறைந்திருந்தற்கான ‘பழி வாங்கலாகவும்’ இதனை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு இயக்குனர் வர்ஷா பரத் மட்டுமே பதில் சொல்ல முடியும்.
’இது கமர்ஷியலா இருக்கா’, ‘பீல்குட் படமா’, ‘ஜாலி கேலியா பிரசண்டேஷன் இருக்குதா’ என்பது போன்ற கேள்விகள் இப்படத்தைப் பார்க்க நிச்சயம் துணை நிற்காது. ’பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று கற்பிதங்கள் பல கொண்டோருக்கு இப்படம் ஆகவே ஆகாது.
மேற்சொன்னவற்றை மீறி, பெருநகரத்துப் பெண்ணொருத்தியின் ‘ஆட்டோகிராஃப்’ ஆக ‘பேட் கேர்ள்’ளை கொண்டாடலாம். அதற்கான மனநிலையுடன் தியேட்டருக்குள் நுழைந்தால் இப்படம் ‘நன்று’ ஆகத் திரையில் தெரியும்..!