ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களான ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகியோரை சட்டமன்ற பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என அன்புமணி தரப்பில் இன்று (செப்டம்பர் 25) மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இருதரப்பிலும் அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாமகவில் ஜி.கே.மணி (பொன்னாகரம்), அருள் (சேலம்), வெங்கடேஷ்வரன் (தருமபுரி), சிவக்குமார் (மயிலம்) மற்றும் சதா சிதம் (மேட்டூர்) என மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இவர்களில் ஜி.கே.மணி பாமக சட்டமன்றக் குழு தலைவராகவும், அருள் சட்டமன்ற கொறடாவும் பதவி வகித்து வருகின்றனர்.
இருவரும் ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்கள் என்ற நிலையில், அவர்களின் பதவிகளை பறிக்கும்படி அன்புமணி தரப்பு எம்.எல்.ஏக்களான வெங்கடேஷ்வரன், சிவக்குமார், சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டமன்ற செயலாளரிடம் இன்று மனு கொடுத்துள்ளனர்.
மேலும் அவர்களுக்கு பதிலாக பாமக புதிய சட்டமன்றக் குழு தலைவராக வெங்கடேஷ்வரனையும், சட்டமன்ற கொறடாவாக சிவகுமாரையும் பரிந்துரை செய்துள்ளதாகவும், அவர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமதாஸ் – அன்புமணி மோதல் முற்றி வரும் நிலையில், தற்போது ஜி.கே. மணி மற்றும் அருளின் பதவி பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இந்த சம்பவத்திற்கான பின்னணியில் ராமதாஸ் தரப்பு பாமக கெளரவத் தலைவர் ஜி.கே மணி மற்றும் ராமதாஸ் உதவியாளர் சாமிநாதனின் டெல்லி பயணம் உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி இரவு பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, ராமதாஸ் உதவியாளர் சாமிநாதன் இருவரும் டெல்லி சென்றிருந்தனர். அங்கே தேர்தல் ஆணையரை சந்தித்து கட்சியின் தலைவரும், நிறுவனரும் ராமதாஸ் தான். சமீபத்தில் பொதுக்குழு கூட்டி அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அன்புமணி பாமக அலுவலக முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளார். அவரை தலைவராக ஏற்கக் கூடாது” என அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஜி.கே.மணி.
அதைத் தொடர்ந்து அவர் பாஜக தலைவர்களை சந்திக்க முயற்சி செய்ததாக ராமதாஸ் பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் கூறினார். அப்போது ஜி.கே.மணிக்கு டெல்லியில் அந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறதா? என்று கேட்டோம். அப்போதுதான் சாமிநாதனின் பின்னணி விளக்கினார்.
பாமக எம்பியாக இருந்த பொன்னுசாமி 1999 -2001 பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மத்திய பெட்ரோலிய இணையமைச்சராக இருந்தார்.
அப்போது முதல் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த வரையில், இந்த சாமிநாதன் தான் அனைத்து பாமக அமைச்சர்களுக்கும் பி.ஏவாகவும் நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். நீண்ட காலம் டெல்லியில் இருந்ததால் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களுடன் நல்ல அறிமுகம் உள்ளது.
அதனால் தனது பழக்கத்தை வைத்து மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க பல வழிகளில் முயற்சி செய்துவந்தார் சாமிநாதன். ஆனால் அன்புமணியின் டெல்லி லாபியால் அவருக்கு எங்கேயும் அனுமதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று சென்னை திரும்பிய ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பாமக தொடர்பான சில ஆவணங்களையும், தகவல்களையும் வழங்கியுள்ளோம். பாமக அலுவலகம் மாற்றப்பட்டதில் அன்புமணி தரப்பு முறைகேடு செய்துள்ளனர். அன்புமணி கட்சியின் அலுவலக முகவரி மாற்றியது மற்றும் ஓராண்டு தலைவர் பதவி நீட்டிப்பு என்று அனைத்தும் பொய்யான தகவல் அது மிகப் பெரிய முறைகேடு.
கடந்த மே மாதம் 28ஆம் தேதியுடன் அன்புமணியின் பதவி காலம் முடிவடைந்துவிட்டது. எனவே அன்புமணியின் பதவி செல்லாது என்பதில் உறுதியாக உள்ளோம். ராமதாஸ் தலைமைதான் உண்மையான பாமக என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தோம். தேர்தல் ஆணையம் கூடுதல் தகவல் கேட்டதையடுத்து அதையும் கொடுத்துள்ளோம். அதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. பாமக விவகாரத்தில் விரைவில் தேர்தல் ஆணையம் நல்ல முடிவை அறிவிக்கும்” எனக் கூறியிருந்தார்.
இதனையடுத்து தான் தனக்கு எதிராக டெல்லி வரை சென்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட ராமதாஸ் தரப்பு ஆதரவாளரான ஜி.கே.மணியை சட்டமன்ற பொறுப்பில் இருந்த நீக்க கடிதம் அளிக்கும்படி தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளார் அன்புமணி” என்கின்றார்கள் அன்புமனி பாமக மாவட்ட செயலாளர்கள்.