வைஃபை ஆன் செய்ததும், “அலைகளும் ஓய்ந்து போகுமோ” என்கிற பாடல் வரிகளை உச்சரித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
எந்த ‘அலைகள் ஓயாது’ய்யா?
டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய சந்திப்பைத்தான் விரிவாகவே சொல்றேன்யா..
எடப்பாடி பழனிசாமியிடம் தொடக்கம் முதலே சீரியசாகத்தான் பேசியிருக்கிறார் அமித்ஷா.
எடப்பாடியிடம் பேசிய அமித்ஷா, “2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனை சேர்த்துக்க முடியாதுன்னு சொன்னீங்க.. அப்ப நமக்கு என்ன ரிசல்ட் கிடைச்சுச்சு? இன்னும் 20 தொகுதிகள் கூடுதலாக நமக்கு கிடைச்சிருக்கும்.. திமுக மைனாரிட்டி கவர்மென்ட் அமைச்சிருக்கும்.. அதை வெச்சு எவ்வளவோ அரசியல் செஞ்சுருக்கலாம்..
சரி.. 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணியை விட்டே வெளியே போனீங்க.. அப்ப எல்லோரும் ஒன்றாக இருந்து தேர்தலை சந்திச்சிருந்தா குறைந்தசது 10, 12 சீட் ஜெயிச்சிருக்கலாம்.. கடைசியில திமுகதான் அத்தனை இடத்துலயும் ஜெயிச்சது…” என கேப் விடாமல் பேசியிருக்கிறார்.
இப்ப கொஞ்சும் ஆசுவாசப்படுத்திக் கொண்ட எடப்பாடி, “இப்பவும் என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்கவே முடியாதுன்னு சொல்றாரு டிடிவி தினகரன்.. அவரை திமுகதான் தூண்டிவிடுது.. திமுக பேச்சை கேட்டுகிட்டுதான், திமுகவுக்கு ஆதாயம் கிடைக்கிற மாதிரி 2021 சட்டமன்ற தேர்தலிலும் வேலை செஞ்சாரு டிடிவி தினகரன்.. இப்பவும் அவரை கூட்டணியில் சேர்த்தாலும் அதையே செய்வாரு.. தினகரனை கூட்டணியில் சேர்த்தா, போன முறையை விட இந்த முறை கூடுதலான தொகுதியில தோற்றுப் போவோம்.. இப்பவும் என்னை அவரு சிஎம் வேட்பாளராகவும் ஏத்துக்கலையே.. அவரு திமுகவுடன் கூட்டணி வைச்சுகிட்டுதான் இந்த வேலை எல்லாம் செய்யுறாரு’ என சடசடவென சொல்லிவிட்டு.

அடுத்ததாக,
“ஓபிஎஸ்ஸை பொறுத்தவரைக்கும் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தா ஏகப்பட்ட குழப்பம் வரும்.. கட்சிக்காரங்களே அவரை சேர்க்க வேண்டாம்னுதான் சொல்றாங்க..
ஒருங்கிணைந்த அதிமுக என்றெல்லாம் சொல்லவே வேண்டாம்.. நாங்கதான் அதிமுக.. அதே நேரத்துல, டிடிவி தினகரனையோ ஓபிஎஸ்ஸையோ தேசிய ஜனநாயகக் கூட்டணியில இணைச்சுக்கிறது உங்களோட விருப்பம். மொத்தமாக பாஜகவுக்கு 40 சீட் கொடுத்துடறோம்.. அதுல அவங்களுக்கு நீங்க எவ்வளவு வேணும்னாலும் கொடுங்க” என்றும் ‘நீண்டநாட்களாக’ சொல்ல நினைத்ததை எல்லாம் கொட்டிவிட்டது போல ‘பெருமூச்சு’விட்டாராம் எடப்பாடி.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் எடப்பாடியே, “அதிமுகவில் எனக்கு எதிராக குழப்பத்தை ஏற்படுத்தனும்தான் செங்கோட்டையன் பேசிகிட்டிருக்காரு.. அவரு உங்களை பார்த்ததா சொல்றாரு.. இதே மாதிரி பேசுறவங்க எல்லாம் உங்களை சந்திச்சா எங்க கட்சியில ரொம்பவே குழப்பம் வந்துடும்” என அழுத்தமாக சுட்டிக் காட்ட, “சரி.. அதை பார்த்துக்கலாம்.. அப்படி வருகிறவங்களை அவாய்ட் செய்யலாம்”னு சொன்னாராம் அமித்ஷா.
எடப்பாடியைப் பொறுத்தவரைக்கும், “நான்தான் சிஎம் வேட்பாளர்; டிடிவி தினகரன்-ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை” என்ற இரண்டு விஷயங்களை அழுத்தமாக அமித்ஷாவிடம் சொல்லிவிட்டோம் என்ற நிம்மதியாம்.
இந்த சந்திப்பு முடியுற நேரத்துல அமித்ஷா சீரியசாக ஒரு விஷயத்தை ஷேர் செய்திருக்கிறார். “உங்க கட்சியில இருக்கிற முக்கியமான சீனியருங்க சில பேருடன் திமுக தரப்பில் பேசிகிட்டு இருக்காங்க.. தேர்தல் நேரத்துல திமுக அவங்களையெல்லாம் இழுக்கப் பார்ப்பாங்க.. அதனால ரொம்ப கவனமாகவே இருங்க” என அணுகுண்டை வீச அதிர்ச்சியடைந்தாராம் எடப்பாடி..
அந்த அதிர்ச்சியுடன், “நம்ம கூடவே இருக்கிறவங்களில் யாரு திமுகவுக்கு போவாங்க… யார் கிட்ட திமுக பேசுது? அவரா இருக்குமோ? இவரா இருக்குமோ” என்ற குழப்பத்துடனேயே கர்சீப்பால் முகத்தை துடைத்தபடி காரில் ஏறினார்.. ஓ.. ‘அதுதான்’ இப்ப இண்டர்நேஷனல் டிபேட்டாகிடுச்சோ?
அதுசரி.. இந்த ‘அலைகளும்தான் ஓயாது’ய்யா… ஓபிஎஸ் கூடாரத்தில் ஒரே களபரமா? என்னாச்சாம்?

ஓபிஎஸ்ஸை நம்பிப் போன பலரும் புலம்பித் தள்றாங்க.. எதுவும் எம்ஜிஆர் காலத்து சீனியர் பண்ருட்டியார் ரொம்பவே கோபமாக இருக்கிறார்.
“அதிமுகவில் சேர்த்துக்குங்க என இனியும் கெஞ்ச வேண்டாம்.. தனிக்கட்சி தொடங்கிடுங்க… நம்பி வந்த தொண்டர்கள் ஒரு கட்சின்னு ஒதுங்குறதுக்கு இடமா அது இருக்கட்டும்.. அதுக்கு முதலில் மாநாட்டை கூட்டுங்க.. அதுல ஒரு அறிவிப்பை வெளியிடுவோம்”னு கிளிப்பிள்ளைக்கு சொன்ன மாதிரி ஓபிஎஸ்-க்கு வகுப்பு எடுத்திருக்கிறாரு பண்ருட்டி ராமச்சந்திரன்.
ஓபிஎஸ்ஸோ, தனிக் கட்சியா? மாநாடா? கஜானா என்னாவாகுமோ? என்கிற கலக்கத்தில், ‘ அதெல்லாம் பார்த்துக்கலாம்ணே.. பார்த்துகலாம்ணே’ என இழுத்தடித்துக் கொண்டே போக, ரொம்பவே கடுப்படித்துவிட்டாராம் பண்ருட்டியார்.
ஓபிஎஸ்ஸுடன் இருக்கும் வைத்திலிங்கத்தை அழைத்து, ‘இவ்வளவு தூரம் பச்சபுள்ளைக்கு சொல்ற மாதிரி நம்பி வந்தவங்களை கைவிடாதீங்க.. அவங்களுக்காக ஒரு கட்சியை ஆரம்பிங்கன்னு சொல்றேன்.. அதை பற்றி கண்டுக்காமலேயே இருக்கிறாரே.. இனி நீங்களாச்சு… என் வேலையை நான் பார்க்குறேன்”னு எகிறிவிட்டாராம் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.