அ. குமரேசன்
சாவேஸ் தாண்டவம் – வசமான பொருளாதாரம் – மாறிய சமூகம்
இக்கொள்கைகளை சாவேஸ் செயல்படுத்திய விதம் உலகத்தை வியக்க வைத்தது. முதலாவதாக, நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ குழுமத்தை முழுக்க முழுக்க அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இதில் ஒரு சுவையான பின்னணி இருக்கிறது. 1976ஆம் ஆண்டிலேயே அரசுத் தலைவராக இருந்த கார்லோஸ் ஆண்ட்ரெஸ் பெரெஸ் எண்ணெய் நிறுவனங்களை ஒருங்கிணைத்து அரசுடைமையாக்கிவிட்டார். பிடிஎவிஎஸ்ஏ நிறுவனம் அப்போதுதான் உருவாக்கப்பட்டது. அதுவரையில் ஸ்டாண்டர்ட் ஆயில், கல்ஃப் ஆயில் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள், ராயல் டச் ஷெல் என்ற நெதர்லாந்து–பிரிட்டன் நிறுவனம் ஆகியவைதான் ஏகபோகமாகக் கல்லா கட்டிவந்தன. இதர சிறு குழுமங்கள் இவற்றைச் சார்ந்தே இயங்கிவந்தன.
அரசு நிறுவனமாக இருந்த போதிலும் பிடிவிஎஸ்ஏ ஒரு தனியார் அமைப்பு போன்ற அதிகாரத்துடன் இருந்தது. அதன் வருமானம் முழுவதும் அதற்குள்ளேயே போய்விடும். அதிகாரிகளின் ஊதியங்கள், நிர்வாகச் செலவுகள், புதிய கட்டுமானங்கள், நிறுவன வளர்ச்சிகள் என்றே அதன் வருவாய் செலவிடப்பட்டது. அரசுக்கு லாபத்தில் ஒரு பங்கு மட்டும் போகும். 1990களில் எண்ணெய்ச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் மீண்டும் கால்வைக்க அனுமதிக்கப்பட்டது, சேவ்ரான், கொனோகோ பிலிப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நுழைந்து அரசு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டன.
பிடிவிஎஸ்ஏ அரசாங்கத்துக்கு உள்ளேயே தனி அரசாங்கமாகச் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார் சாவேஸ். 2002–2003இல் அரசின் முழுக்கட்டுப்பாட்டிற்கு அதைக் கொண்டுவந்தார். அரசாங்க நிறுவனத்தின் வருவாய் அரசாங்கத்திற்குத்தான் வர வேண்டும், நிறுவன வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று மாற்றினார். தான்தோன்றித்தனமாகவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பாகவும் இருந்து வந்த உயரதிகாரிகளை நீக்கினார். புதிய கொள்கையை ஏற்றவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தார். அத்துடன், இந்த மாற்றத்திற்கான மையமான நோக்கங்கள் என்னவோ அவற்றுக்காக நிறுவனத்தின் வருவாயைத் திருப்பிவிட்டார். நேரடியாக ஏழை மக்களுக்கான உணவுத் திட்டங்களுக்கும் கல்வி வளர்ச்சிக்கும், மருத்துவ சேவைக்கும் நிதியைத் திருப்பிவிட்டார்.
ஏற்கெனவே கடுப்பில் இருந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மேலும் எரிச்சலூட்டும் வகையில், 2007இல் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி, வெனிசுலாவில் செயல்படும் எந்தவொரு வெளிநாட்டு எண்ணெய்த் திட்டமானாலும், அதன் 60 சதவீதப் பங்குகளை பிடிவிஎஸ்ஏ நிறுவனம் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கினார். எண்ணெய் மட்டுமல்லாமல் மின்சாரம், தொலைத்தொடர்பு, வங்கி ஆகிய துறைகளில் ஆதிக்கம் செலுத்திய வெளிநாட்டு நிறுவனங்களையும் உள்நாட்டுத் தனியார் குழுமங்களையும் அரசாங்கம் கையகப்படுத்தியது. “உழைப்பவர்களுக்கே நிலம்” என்ற கொள்கையின் கீழ் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவசாயக் கூட்டுறவு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

வல்லரசுக்கு சவாலாக
இந்தப் பொருளாதார நடவடிக்கைகளின் இலக்கு சமூக முன்னேற்றம்தான். மக்களின் வறுமை விகிதம் பாதியாகக் குறைந்தது. கல்வி 100 சதவீதத்தை எட்டியது. ஏழைகளுக்கு மருத்துவ சேவை இலவசமாக்கப்பட்டது. 30,000–த்துக்கும் மேற்பட்ட உள்ளுர் சமூகக் குழுக்களுக்கு நிதி அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டது. ஊருக்கு என்ன தேவை என்பதை ஊர் மக்களே முடிவு செய்கிற மாற்றம் ஏற்பட்டது.
இதெல்லாம் போதாதென்று, வல்லரசு வகுப்பதே வாய்க்கால் என்ற நிலைமைக்கு முடிவு கட்டும் வகையில், வட்டார ஒருமைப்பாடு கொள்கையைச் செயல்படுத்தினார் சாவேஸ். லத்தீன் அமெரிக்க நாடுகள் தங்களுக்கிடையே ஒத்துழைப்புடன், அமெரிக்காவின் பிடியிலிருந்து விடுபடுவதே அந்தக் கொள்கையின் நோக்கம்.
2002இல் சாவேஸைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக ராணுவ சதி ஒன்று அரங்கேற்றப்பட்டது. அமெரிக்க அரசின் ஆதரவோடு நடந்த அந்தச் சதியும் முறியடிக்கப்பட்டது. வெனிசுலா மக்கள் போராட்டமும் பேராதரவுமாக அவரையே மறுபடி தேர்ந்தெடுத்தார்கள்.
2013இல் சாவேஸ் மறைவுக்குப் பிறகு நிக்கோலஸ் மதுரோ அரசுத்தலைவரானார். அவரும் இதே கொள்கைகளைத் தொடர்ந்தார் என்றாலும், அமெரிக்கா விதித்த கடும் தடைகளால் வெனிசுலா தனது எண்ணெய்யை விற்க முடியாமல் போனது. உலகச் சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சி இந்த நிலைமையைக் கடுமையாக்கியது. அந்நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்தது. விலைவாசி கடுமையாக உயர்ந்தது.
ஒரு முன்னோட்டம்
ஆயினும் 2018ஆம் ஆண்டுத் தேர்தலில் மதுரோ மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மதுரோவை அங்கீகரிக்க மறுத்தது அமெரிக்க அரசு. 2019இல், நாடாளுமன்றத் தலைவராக இருந்த ஜூவான் குவைடோ என்பவர் தன்னைத்தானே இடைக்கால அரசுத் தலைவராக அறிவித்துக்கொண்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே அதை அங்கீகரித்தார், அப்போதும் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப். இது ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் நேரடித் தலையீடு என்று உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த விமர்சனங்களை அவர் தன் கோட்டில் படிந்த தூசி போலத் தட்டிவிட்டார். தற்போதைய அத்துமீறலுக்கு அது ஒரு முன்னோட்டமாக அமைந்தது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு இந்த இரட்டை அரசுத் தலைமையும் ஒரு காரணமாக அமைந்தது எனலாம். அத்துடன், பொருளாதாரத்துக்கு எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்தது போன்ற காரணங்களும் சேர்ந்துகொண்டன. சோசலிசக் கொள்கையை ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் அமெரிக்க அரசு பல சூழ்ச்சிகளில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக, பல தனியார் நிறுவனங்கள் விலைக் கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு என்று கூறி தங்களது உற்பத்தியை நிறுத்திக்கொண்டன. இதுவும் நெருக்கடியை ஏற்படுத்தியதுடன், கள்ளச் சந்தையையும் திறந்துவிட்டது.
இந்த நிலைமைகளையும் போராடிக் கையாண்ட மதுரோவை, வெனிசுலா மக்கள் மூன்றாவது முறையாகவும் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அதை ஏற்க முடியாமல்தான் “சட்ட விரோதத் தேர்தல்” என்று அறிவித்தார் டிரம்ப். வெனிசுலா மக்கள் அதைத் தள்ளுபடி செய்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாதவராக, இப்போது போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு நாடகத்தை நடத்திக் கைதுசெய்திருக்கிறார். இதற்கு முன்பும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு, சிலி, குவாதமாலா நாடுகளின் இடதுசாரி அரசுகளைக் கவிழ்க்கும் கைங்கரியத்தை அமெரிக்கா செய்திருக்கிறது.
இப்போதைய நடவடிக்கைக்குக் காரணம் போதைப் பொருள்கள் கடத்தல்அல்ல; பெட்ரோலிய வளங்களைக் கைப்பற்றுகிற போதைதான். ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் குற்றங்களுக்கான அலுவலகம் (யுஎன்ஓடீசி) வெளியிட்டுள்ள கொக்கைன் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் வெனிசுலா இல்லை. ஏன், அமெரிக்காவின் போதைப்பொருள்கள் செயலாக்க நிர்வாகம் (டீஇஏ) வெளியிட்டுள்ள, போதைப் பொருள்கள் எந்தெந்த நாடுகளின் வழியாக வருகின்றன என்ற அறிக்கையில், முக்கிய வழிகளில் ஒன்றாகக்கூட வெனிசுலா குறிப்பிடப்படவில்லை.

ஆதாரம் என்னவென்றால்…
நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு என்ன வாதத்தை வைத்திருக்கிறது என்றால், வெனிசுலா ராணுவ அதிகாரிகள் ‘கார்டெல் டி லாஸ் சோல்ஸ்’ (சூரியன்களின் கூட்டமைப்பு) என்ற பெயரில் ஒரு குழுவாக இயங்குகிறார்கள், அதன் மூலம் போதைப்பொருள்களைக் கடத்திப் பெரும் பணம் சேர்க்கிறார்கள், அரசுத் தலைவரின் ஒப்புதலின்றி இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறது. கொலம்பியாவில் உள்ள ஒரு பயங்கரவாதக் குழுவுக்கு வெனிசுலாவின் நவீன ஆயுதங்களைக் கொடுத்து, அவர்களிடமிருந்து போதைக் கடத்தல் பணத்தைப் பெற்றிருப்பதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டிருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆவணப்பூர்வமான ஆதாரங்கள் எதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று மதுரோ வழக்குரைஞர்களும், ஊடகவியலாளர்களும் தெரிவிக்கிறார்கள். மதுரோ மூன்றாவது முறையாகத் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் மீது பல ஊழல், முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை டிரம்ப் சுமத்தினார், மதுரோவை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் சிலர் மூலம் அவற்றை வெனிசுலா மக்கடையே பரப்பினார். அவருடைய உண்மை நோக்கத்தைப் புரிந்துகொண்ட மக்கள் போலிப்புகார்களை நிராகரித்து மதுரோவையே தேர்ந்தெடுத்தார்கள்.
அந்தப் பொய்ப்புகார் பலனளிக்கவில்லை என்றதும் இப்போது போதைப் பொருள் புகாரைக் கையில் எடுத்திருக்கிறார் டிரம்ப். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் என்னவென்றால், பெரும்பாலும் சாவேஸ் கொள்கைகளோடு முரண்பட்டு அமெரிக்காவுக்கு ஓடிப்போன முன்னாள் அதிகாரிகள் கூறும் வாக்குமூலங்கள்தான்.
(அடுத்த கட்டுரையோடு நிறைவு)
