ADVERTISEMENT

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் : அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

Published On:

| By Kavi

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதை தவிர்க்க விதிகளை திருத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் குற்றச்செயல்கள் செய்த அரசு ஊழியர்கள் அவர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படும் நடவடிக்கை இருந்து வந்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில் 2021ல் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110-இன் கீழ் அறிவித்ததன் அடிப்படையில், ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதை தவிர்க்க விதிகளை திருத்தி அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 29ஆம் தேதியிட்ட அந்த அரசாணையில், “குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் உரிய தேதியில் ஓய்வு பெற அனுமதிக்கப்படுவார்கள். 

ADVERTISEMENT

ஆனால் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிந்த பின்னர்தான் பணப்பலன்கள் பெற முடியும்.

சில வழக்குகளில் குற்றம் செய்தவர் மீதான விசாரணை நீண்ட காலம் செல்லும் போது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்காக அவர் தற்காலிக இடைநீக்கத்தில் வைக்கப்படுவார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் விசாரணையில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க சில வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. 

அதாவது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன்னர், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள்  ஆய்வு செய்யப்பட வேண்டும். குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதா, மிகப்பெரிய தண்டனைக்குரியதா, பணி நீக்கம் செய்வதற்கு உரியதா என ஆய்வு செய்யப்பட வேண்டும். 

அவர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தால் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்படுவதை தவிர்த்து மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே உரிய முடிவை எடுக்க வேண்டும். 

மூன்று மாதங்களுக்கு முன்னரே துறை ரீதியான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்க முடியாத பட்சத்தில் நடவடிக்கைகளில் நிர்வாக ரீதியான தாமதத்தை கருத்தில் கொண்டு அந்த அரசு ஊழியரை ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும். 

மூன்று மாதங்களுக்கு முன் ஏதேனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் போர்க்கால அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தவறு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டால் அப்போது பணியிடை நீக்கம் செய்யலாம். 

முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை மூன்று மாதங்களுக்கு முன் முடிக்காமல் விசாரணை அதிகாரி தாமதப்படுத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஓய்வு பெறுவதைக் கருத்தில்கொண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் உரிய விளக்கத்தை அளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். இயற்கை நியதிக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share