தனது மகனின் மரணத்தால் பாதிக்கப்பட்ட – பண்டோரா உலகில் வாழும் – மெட்கைனா என்ற குலத்தில் இருக்கும் – அவதார் மனிதர்களில் ஒருவனான ஜேக் செல்லியும் (Sam Worthington) அவன் குடும்பத்தாரும் மனம் உடைந்த நிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக (நம்மைப் போன்ற) மனித இனத்தையே ஜேக்கின் மனைவி நெய்த்ரி (Zoe Saldaña) வெறுக்கிறாள்.
அவர்களுடன் இருக்கும் ஸ்பைடர்(Jack Champion) என்பவன் ஒரு மனிதப் பிறவி. அவன் மெட்கைனா கூட்டத்தில் இருந்து விலகிப் போய்விட வேண்டும் என்று ஜேக்கும் நெய்த்ரியும் வற்புறுத்துகிறார்கள். ஆனால் ஜேக் மற்றும் நெய்த்ரியின் மகளான கிரி (Sigourney Weaver) அதை விரும்பவில்லை. ஸ்பைடர் மீது கிரிக்கு நேசம்.
மாங்க்வான் என்ற ஆக்ரோஷமான நவி பழங்குடியினர் சாஹிக் வரங் (Oona Chaplin) என்பவளின் தலைமையில், ஜேக்கின் மெட்கைனா குல மக்கள் மீது மிருகத்தனமான கடும் தாக்குதல் நடத்துகிறார்கள். ஜேக், நெய்த்ரி மற்றும் குழந்தைகள் தனித்தனியாகப் பிரிகிறார்கள். ஸ்பைடர் கடத்தப்படுகிறான்.
ஜேக் ஸ்பைடரை தேடிப் போக, ஜேக்கின் முன்னாள் நண்பனின் புதிய வடிவமாக இருக்கும் மைல்ஸ் குவாரிச்சும் (Stephen Lang) அந்தத் தேடலில் பங்கு கொள்கிறான்.

ஜேக்கிற்கும் மைல்ஸ் குவாரிச்சுக்கும் ஆகாது. காரணம் முன்பு பண்டோராவுக்கு வந்து மாட்டிக் கொண்ட கும்பலில் இருந்தவன் மைல்ஸ் குவாரிச், (முந்தைய அவதார் படம்) அவனது மகன்தான் ஸ்பைடர். மைல்ஸ் குவாரிச் ஜேக் குடும்பத்தை மட்டுமல்ல, தன் மகன் ஸ்பைடரையும் பழிவாங்கத் துடிப்பவன்
சாதாரண மனிதனான ஸ்பைடர், பண்டோரா உலகில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாமல் வாழ முடியாது. அவனது மாஸ்க் ஒன்று தொலைந்து போக, இன்னொரு மாஸ்க்கில் உள்ள ஆக்சிஜன் தீர்ந்து போக, மூச்சுத் திணறி மரணத்தின் பிடியில் இருக்கிறான்.
தனது வாலில் உள்ள சக்தியை தரையில் மைசீலியா என்ற வெண்ணிற இழைகள் கொண்ட பூஞ்சைத் தாவரத்தின் மூலம் கிரி பாய்ச்சும் சக்தி, மயங்கி கிடைக்கும் ஸ்பைடரின் உடலை அடைய, அவன் மாஸ்க் இல்லாமலேயே பண்டோராவில் சுவாசிக்கும் சக்தியைப் பெறுகிறான்.
இந்த நிலையில் ரத்த வெறி பிடித்த சாஹிக் வரங் குக்கு மைல்ஸ் குவாரிச் நவீன போர் ஆயுதங்களை பயன்படுத்தக் கற்றுக் கொடுக்கிறான் . வாரங் இன்னும் ரத்த வெறியாகிறாள்.
ஆனால் ஜேக்கின் மெட்கைனா குளத்தின் படி , ஈட்டி தவிர நவீன ஆயுதங்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அது ஆயுதம் இல்லாத மனிதனை தாக்கும் கோழைத்தனம் என்பது அவர்கள் முடிவு.
எனவே ஜேக்கின் மகள் கிரி,தங்களின் ஆதித் தெய்வமான ஐவாவை வணங்கி வானம் மற்றும் நீர் விலங்குகளை பயன்படுத்தி எதிரிகளை அழிக்க திட்டமிடுகிறாள்.
சாஹிக் வாரங்கின் மாங்க்வான் பழங்குடியின தெய்வமும் ஐவாதான். அனால் தங்கள் மக்கள் அழிந்தபோது ஐவா உதவவில்லையென்பது சாஹிக் வரங்கின் கோபம்.
பண்டோராவில் மாஸ்க் இல்லாமல் சுவாசிக்கும் ஆற்றலாய் ஸ்பைடர் பெற்றது மனிதர்களுக்குத் தெரிந்தால், அதே பாணியில் எல்லா மனிதர்களும் அந்த சக்தியைப் பெற்று பண்டோராவுக்கு வந்து ஆக்கிரமித்து, பூமியை நாசப்படுத்தியது போல பண்டோராவையும் நாசப்படுத்தி விடுவார்கள் என்பது ஜேக் மற்றும் நெய்த்ரியின் பயம்.
எனவே ஸ்பைடரைக் கொன்று, மனிதர்கள் பண்டோராவில் வாழ முடியாத நிலையை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இத்தனைக்கும் ஒரு முறை ஸ்பைடர் ஜேக்கின் உயிரைக் காப்பாற்றியும் இருக்கிறான்.
ஸ்பைடரைக் கொல்ல முயன்று, மனசாட்சி உறுத்தலால் அதைச் செய்ய முடியாத காரணத்தால், ”என்ன ஆனாலும் சரி ஸ்பைடரைக் கொல்லக் கூடாது அதே நேரம் ஸ்பைடரைத் தவிர மற்ற மனிதர்கள் பண்டோராவில் சுவாசிக்கும் திறனை பெற விடவும் கூடாது” என்று முடிவு செய்கிறார்கள்.
ஸ்பைடர் பண்டோராவில் சுவாசிக்கும் திறன் பெற்று இருப்பதை அறிந்த நம்ம மனிதர்கள் , அதே திறனை மற்ற மனிதர்களுக்கும் கொடுத்து பண்டோராவை ஆக்கிரமிக்க எண்ணி, ஸ்பைடரைக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறார்கள். அவனை வைத்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன
தவிர மனிதர்களின் நவீன ஆயுதங்கள் பண்டோரா உலகில் கடும் சேதங்களை ஏற்படுத்துகின்றன. பண்டோரா மனிதர்கள் கொத்துக் கொத்தாக மடிகிறார்கள்.

எனவே பண்டோராவில் உள்ள கடல்களில் வாழும் ராட்சத திமிங்கிலங்களை விட பெரிய உருவம் கொண்ட துல்குன் என்ற உயிரினங்களின் உதவியை நாடுகிறார்கள் அந்த மக்கள். . ஆனால் துலகுன்களின் தலைமை ‘வன்முறையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று சொல்லி விடுகிறது.
அப்போது சக உயிரி ஒன்றை மனிதர்கள் கொடூர ஆயுதங்களால் தாக்கி குருடாக்கி விட, பலத்த காயங்களுடன் அது கடலில் தடுமாறுவதை கண்டு பொங்கி எழுந்த துல்குன்கள் போருக்கு சம்மதிக்கின்றன,
ஸ்பைடரை மனிதர்களிடம் இருந்து மீட்டு பண்டோரா உலகுக்கு விரைவில் கொண்டு வராவிட்டால் , பண்டோராவில் சுவாசிக்கும் ஸ்பைடரின் திறனை எல்லா மனிதர்களும் பெற்று விடுவார்கள்
ஸ்பைடரை மீட்க கிளம்புகிறான் ஜேக் .
ஆனால் மனிதர்களின் நவீன ஆயுதங்கள் ஒன்றும் சாதாரணமானவை இல்லை.
நடந்தது என்ன என்பதே…
Light Storm Entertainment, Inc நிறுவனம் சார்பில் Jon Landau உடன் சேர்ந்து தயாரித்து,
Rick Jaffa, Amanda Silver, Josh Friedman, Shane Salerno ஆகியோருடன் சேர்ந்து கதை எழுதி,
Rick Jaffa, Amanda Silver, ஆகியோருடன் சேர்ந்து திரைக்கதை அமைத்து,
Stephen E. Rivkin, David Brenner, Nicolas de Toth, John Refoua, Jason Gaudio ஆகியோரோடு சேர்ந்து படத்தொகுப்பு செய்து,
ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருக்கும், காவிய அறிவியல் புனை கதைப் படம் Avatar: Fire and Ash.
2022 இல் வந்த Avatar: The Way of Water படத்தின் தொடர்ச்சி இது.
அந்தப் படத்தில் நடித்த Sam Worthington, Zoe Saldaña, Sigourney Weaver, Stephen Lang, மற்றும் Kate Winslet ஆகியோர்இந்தப் படத்திலும் அதே வேடங்களில் நடிக்க. Oona Chaplin ,, David Thewlis இருவரும் இணைந்திருக்கிறார்கள்.
Avatar: Fire and Ash.
இது ஒரு கதை அல்ல. மாபெரும் காட்சி அனுபவம்.
முதல் காட்சியில் துவங்கும் கண்களை விரிய வைக்கும் வியப்பு அனுபவம் மூன்று மணி நேரம் பதினேழு நிமிடங்கள் வரை தொடர்கிறது
விதம் விதமான உலகங்கள், வடிவங்கள், உருவங்கள், உயிரிகள், வண்ணங்கள், பிரகாசிக்கும் ஒளி வண்ணங்கள், ஆழ்கடல், என்று பிரம்மிக்க வைக்கிறார்கள் . அப்படி ஒரு விஷுவல் எபக்ட் , ரம்மியம்.. பிரம்மிப்பு!
அவதார் இனங்கள், மனிதர்கள், இரண்டும் கலந்த அமைப்புகள், இறந்த மனிதர்கள் நினைவுகளால் உடலோடு உயிர்த்து இருப்பது என்று கற்பனைக்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் படம் முழுக்க கொட்டிக் கிடக்கின்றன.
‘வெள்ளையா இருக்கறவன் போய் சொல்ல மாட்டான்’ என்பது நாம் கேட்ட காமெடி அல்லது விவரம் இல்லாதவர்களின் நம்பிக்கை.
ஆனால் இந்தப் படத்தில் ”வெள்ளைத் தோல் கொண்ட மனித வஞ்சகர்கள் ; அவர்களை பார்த்தாலே பிடிக்கவில்லை ..” என்பது போன்ற வசனங்களை, அதே வெள்ளைத் தோல் கொண்ட ஜேம்ஸ் கேமரூன் எழுதி இருப்பது அவரது படைப்பு நேர்மைக்கு சாட்சி.
ஒவ்வொரு நடிகர்களும் தங்களது அவதார் முகத்துக்கு மாறி நடித்தாலும் , அந்த முகங்களில் தெரியும் உணர்வுப் பூர்வம் என்பது தொழில் நுட்பம் கலை நுட்பம் இரண்டும் கலந்த அற்புதம்.
ரோனால் என்ற கதாபாத்திரத்தில் வரும் (டைட்டானிக் புகழ்) கேட் வின்ஸ்லெட் (அந்த அழகு முகத்தை இங்கே தேடாதீர்கள். இது அவதார் வடிவில் மாற்றப்பட்ட முகம் ) குழந்தை பெற்று விட்டு மரணிக்கும் காட்சி, இவ்வளவு பெரிய தொழில் நுட்பத் சாதனைக்கும் கூட செண்டிமெண்ட் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது .
தமிழில் டப்பிங் செய்தவர்கள் அசத்தி இருக்கிறார்கள் .
கப்பலில் பறந்து வந்து வியாபாரம் செய்பவர்களுக்கு ‘வான் வணிகர்’ என்ற தங்கத் தமிழ்ப் பெயரை மொழி மாற்றும்போது பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அதே போல பண்டோரா வாழ் அனைத்து அவதார் இனங்களின் மக்களுக்கும் ஒட்டுமொத்த தெய்வமான ஐவாவுக்கு , ‘ முது பெருந் தாய் ‘ என்று அற்புதமான பெயரை வைத்து இருக்கிறார்கள்.
பின்னணி பேசியவர்கள் முது பெருந்தாயே என்று சொல்லும்போது எல்லாம் அவ்வளவு கம்பீரமாக இருக்கிறது . இதற்கே அவர்களுக்கும் ஒரு ஆஸ்கார் விருது தரலாம்.
அவதார் எல்லாம் குழந்தைகள் உட்பட எல்லோரும் விரும்பிப் பார்க்கும் படங்கள்.
ஆனால் இதில் சில காட்சிகளில் வரும் இரட்டை அர்த்த வசனங்கள் எதிர்பாராத அதிர்ச்சியாக,முகம் சுளிக்க வைக்கின்றன.
அதெல்லாம் படம் எடுக்கத் தெரியாதவன் செய்யற வேலை. உங்களுக்கு என்ன கேடு?
அவதார் உருவப் பெண்களிலேயே மிக அழகாக இளமையாக இருப்பது இளம்பெண் கிரியின் உருவம்தான் . ஆனால் அதில் நடித்த Sigourney Weaver வயது 76 . அய்யா ஜேம்ஸ் கேமரூன் ! தொழில்நுட்பத்தின் விஸ்வரூபம்.
ஆக்ரோஷ வில்லி ஷாஹிக் வரங் ஆக நடித்து இருக்கும் Oona Chaplin என்பவரின் அவதார உருவம் படு தெனாவட்டாக இருக்கிறது. அவரது நிஜ உருவமும் அவ்வளவு ஈர்ப்பு. .
எனினும் படத்தின் நீளம் ஒரு குறைபாடுதான் . முந்தைய பாகம் மூன்று மணி நேரம் பனிரெண்டு நிமிடம். இந்தப் பாகம் மூன்று மணி நேரம் பதினேழு நிமிடம்.
முதல் முறையாக அவதார் படம் பார்ப்பவர்களுக்கு இது மாபெரும் விருந்து . ஆனால் முந்தைய பாகங்களை பார்த்தவர்களுக்கு?
பெரிதாகப் புதிதாக ஒன்றும் இல்லை. முதல் பாகத்தில் பார்த்தது போலவே பெரும்பாலான விஷயங்கள் .
Joe Letteri யின் விஷுவல் எஃபக்ட்ஸ் இந்தப் படத்தில் மற்ற பாகங்களை விட உயரத்தில் தரத்தில் இருக்கிறது. பின்னணி இசையும் (Simon Franglen) சிறப்பு.
அவதார் முதல் பாகம் கொடுத்த பிரம்மிப்பு அபாரமானது. இரண்டாம் பாகமு ம் பெரு வெற்றி பெற்றாலும் முதல் பாகம் அளவுக்கு பாராட்டப்படவில்லை.
இந்த மூன்றாவது பாகம் இரண்டாவது பாகத்தை விட சிறப்பு.
எனினும் அவதார் போன்ற படங்களை பார்ப்பதே ஒரு மகோன்னத அனுபவம்தான்.
மொத்தத்தில் Avatar: Fire and Ash.. just blasts and smashes
— ராஜ திருமகன்
