எழுத்தாளர் பெருமாள் முருகனின் வகாரி சிறுகதையின் அடிப்படையில் உருவான படம்தான் பல விருதுகள் பெற்ற சேத்துமான்.
இவரது கூளமாதாரி, பூக்குழி போன்ற படைப்புகளின் ஆங்கில மொழியாக்கம் seasons of the palm, Pyre போன்ற ஆங்கிலப் படங்களாகவும் வந்திருக்கின்றன.
அடுத்து இவரது ‘கோடித்துணி’ என்ற சிறுகதையைத் தழுவி ‘அங்கம்மாள்’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது.
முதன்மைக் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்திருக்கிறார். சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் ஆகியோர் உடன் நடித்திருக்கின்றனர். விபின் ராதாகிருஷ்ணன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

படம் பற்றி எழுத்தாளர் பெருமாள் முருகன் சொல்லும்போது “இந்தப் படத்தின் கதை என்னுடையது என்றாலும் இதற்கான தழுவல் உரிமையை கொடுத்ததோடு என் பங்கு முடிந்துவிட்டது. இதன் பிறகு, இந்தக் கதையை முழுமையாகப் புரிந்து கொண்டு படமாகக் கொண்டு வந்ததில்தான் இயக்குநரின் திறமை உள்ளது.
சிறுகதை சினிமாவாக மாறும்போது அதில் பல விஷயங்கள் மாறலாம். குறிப்பாக இந்தக் கதையில் கிளைமாக்ஸ் மற்றும் பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துவதை சொல்லலாம்.
25 நிமிடங்கள் நீளம் கொண்டு குறும்படத்திற்கான கதையை முழுநீள படமாக நேர்த்தியுடனும் ஆழத்துடனும் இயக்குநர் மாற்றியிருக்கிறார்” என்றார்.

ஓர் எழுத்தாளரின் கதை சினிமாவுக்கு வருவது மட்டும் முக்கியம் இல்லை.
சினிமா என்ற ஊடகத்துக்குப் பொருத்தமான வகையில் திரைக்கதையும் படமாக்கலும் முக்கியம்.
அப்படி இருப்பாளா அங்கம்மாள்?
–ராஜ திருமகன்.
