பாலஸ்தீனத்தை அங்கீகரிப்போம்… ஆஸ்திரேலியா அதிரடி… கதறும் இஸ்ரேல்!

Published On:

| By Minnambalam Desk

பாலஸ்தீன அரசை (State Of Palestine) அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 11) அல்பனீஸ் கூறியதாவது:

ADVERTISEMENT

“வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது கூட்டத்தில், ஆஸ்திரேலியா பாலஸ்தீன் அரசை அங்கீகரிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

பாலஸ்தீன மக்களுக்கு, அவர்கள் தமக்கென ஒரு அரசை அமைத்துக் கொள்ளும் உரிமையை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும்.

ADVERTISEMENT

இது, பாலஸ்தீன ஆணையத்திடமிருந்து ஆஸ்திரேலியா பெற்றுள்ள உறுதிப்பாடுகளின் அடிப்படையில் அமையும்.

இந்த உரிமையை நனவாக்க, உலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம்.

ADVERTISEMENT

ஆஸ்திரேலியா இன்று இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு, எங்கள் அமைச்சரவை கூட்டத்திற்கு பின், இரு-நாடுகளின் தீர்வை முன்னெடுத்துச் செல்லும் ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக முடிவு செய்துள்ளோம்.

கடந்த இரண்டு வாரங்களில், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன், மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு,பாலஸ்தீன ஜனாதிபதி அபாஸ், லக்ஸம்பர்க் பிரதமர், ஜப்பான் பிரதமர் ஆகியோருடன் இதைப் பற்றி நான் ஆலோசித்தேன்.

இரு-நாடுகள் தீர்வே, மத்திய கிழக்கில் வன்முறைச் சுழற்சியை உடைத்து, காசாவில் நடைபெறும் மோதல், துயரம், பசியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மனிதகுலத்தின் சிறந்த நம்பிக்கை.

இந்த அறிவிப்புடன், கனடா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீனை அங்கீகரிக்கத் தயாராக உள்ளன” என்று கூறியுள்ளார்.

உலகின் பெரும்பாலான நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீனை அங்கீகரித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆஸ்திரேலியாவின் இந்த அறிவிப்புக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ஆஸ்திரேலிய தூதர் அமீர் மைமோன், “ஒருதலைப்பட்ச அங்கீகாரம் காசா போரைக் கைவிட செய்யாது” எனக் கூறி இந்த முடிவை நிராகரித்தார்.

அதேபோல், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், இது ஹமாஸ் பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதற்கு சமம் என விமர்சித்தார்.

இந்த அறிவிப்புக்கு முன்பாக, சிட்னி ஹார்பர் பாலத்தில் நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள், இஸ்ரேலின் காசா போருக்கு எதிராக பேரணியில் பங்கேற்றனர்.

ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங், “பாலஸ்தீனை அங்கீகரிப்பது எப்போது என்பதே கேள்வி; நாங்கள் செய்யப் போவதில்லை என்பது அல்ல” என்று குறிப்பிட்டார்.

ஆனால் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி, ஹமாஸ் இன்னும் காசாவை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், மற்றும் சிறைவாசிகள் விடுவிக்கப்படாத நிலையில், அங்கீகாரம் அளிப்பது தவறு என்றும் இது அமெரிக்காவுடனான ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை முரணாக்கும் என்றும் குற்றம்சாட்டியது.

ஆஸ்திரேலிய கிரீன்ஸ் கட்சி, இந்த முடிவை வரவேற்றாலும், மக்களின் கோரிக்கைப்படி இஸ்ரேலுக்கு எதிராக தடைகள் விதிப்பது, மற்றும் ஆயுத விற்பனையை நிறுத்துவது போன்ற செயல்பாடுகளை அரசு மேற்கொள்ளவில்லை என விமர்சித்தது.

பாலஸ்தீன் ஆதரவு அமைப்பான APAN கூட, இது வெறும் அரசியல் முகமூடி என்றும், இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் அடக்குமுறையை சவாலுக்கு உட்படுத்தாதது என்றும் குற்றம்சாட்டியது.

இதே நேரத்தில், நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், பாலஸ்தீன் அங்கீகார விவகாரம் எளிதானது அல்ல என்றும், அடுத்த மாதம் நியூசிலாந்து அமைச்சரவை இதுகுறித்து முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.

தற்போது, ஐ.நாவின் 193 உறுப்புநாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீனை ஏற்கனவே அங்கீகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share