பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு உச்சநீதிமன்றம்.
தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பிரேசிலில் 2022-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிபராக இருந்த போல்சனாரோ, தேர்தலில் தோல்வி அடைந்தார்.
ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி போல்சனாரோ ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அமைந்த புதிய ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கைகளிலும் போல்சனாரோ ஈடுபட்டார்.
இதனையடுத்து தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது, ஆட்சி கவிழ்ப்பு முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போல்சனாரோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போல்சனாரோவை வீட்டு காவலில் அடைத்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நாட்டை விட்டே தப்பி ஓடி அர்ஜென்டினாவில் தஞ்சமடைய போல்சனாரோ முயற்சித்தார். இந்த முயற்சி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் போல்சனாரோ மீதான வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக போல்ன்சனாரோவுக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது பிரேசில் உச்சநீதிமன்றம்.