உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் மீது இன்று (அக்டோபர் 6) வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கவாய் இன்று காலை அமர்வில் ஒரு வழக்கு விசாரணையில் இருந்தார். அப்போது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் நீதிபதி கவாய் மீது செருப்பு ஒன்றை வீச முயற்சித்தார். அப்போது “சனாதன தர்மத்திற்கு அவமதிப்பு செய்வதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பின்னர், பாதுகாப்பு அதிகாரிகளால் அந்த நபர் உடனடியாக விசாரணை அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி கவாய், எந்த பதற்றமும் இல்லாமல், நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களை தங்கள் வாதங்களை தொடருமாறு கேட்டு கொண்டார். ”இதற்கெல்லாம் கவனம் சிதற தேவையில்லை. இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை” என தலைமை நீதிபதி கவாய் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கஜூராகோ வளாகத்தில் இருந்த ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த 7 அடி உயரம் கொண்ட விஷ்ணு சிலையை புனரமைத்து மீண்டும் நிறுவ வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பளித்த நீதிபதி கவாய், அந்த தெய்வத்திடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள். கடவுள் விஷ்ணுவின் தீவிர பக்தர் எனக்கூறுகிறீர்கள். சில தலையீடுகளுக்காக விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இது முற்றிலும் தொல்லியல் துறை வரம்பில் வருகிறது. அனுமதி தரலாமா அல்லது வேண்டாமா என முடிவெடுக்க வேண்டியது அந்தத்துறை” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
நீதிபதி கவாய்யின் இந்த கருத்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் ”நான் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தவறான முறையில் சித்தரிக்கப்படுவதாக ஒருவர் கூறினார். நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். நேபாளத்திலும் இது போன்று தான் நடந்தது,” என்று விளக்கம் அளித்திருந்தது குறிப்டத்தக்கது.