இயக்குனர் சொல்ல வருவது என்ன?
கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெவ்வேறு மாநிலங்களில் பரவியிருக்கிற வனப்பகுதியே ‘தண்டகாரண்யம்’ என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள மலைவாழ் கிராமங்கள், அவற்றில் வசிக்கும் மக்கள் பற்றிப் பெரிதாகத் தமிழில் படங்கள் வந்ததில்லை. இந்த டைட்டில் அப்படியொரு கதையைச் சொல்லுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
லப்பர் பந்துக்கு பிறகு தினேஷ் இடம்பெறுகிற ஒரு திரைப்படம், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ தந்த இயக்குனர் அதியன் ஆதிரையின் படைப்பு, அனைத்துக்கும் மேலாகப் படத் தயாரிப்பின் பின்னிருக்கிற இயக்குனர் பா.ரஞ்சித்தின் பங்களிப்பு ஆகியன இதன் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின.
அதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறதா ‘தண்டகாரண்யம்’?

ஏன் இந்த குழப்பம்?
தமிழ்நாட்டின் வடபகுதியிலுள்ள ஒரு மலைப்பாங்கான பிரதேசத்தில் இருக்கிற கிராமத்தினர் அத்தியாவசிய வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அவ்வூரில் வாழ்கிற இரண்டு சகோதரர்களில் மூத்தவர், மக்களுக்கான பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுக்கும் இயல்புடையவர். இளையவருக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்.
எப்படியாவது தம்பியை ஒரு அரசு வேலையில் அமர்த்திவிட வேண்டும் என்பது அண்ணனின் எண்ணம்.
தம்பி வனத்துறையில் தற்காலிகப் பணியைச் சுமார் 7 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். ஆனால், ரேஞ்சரோடு அவருக்கு ஏற்படுகிற மோதல் ஒருகட்டத்தில் முற்றுகிறது.
காட்டுக்குள் நடக்கிற சட்ட விரோதச் செயல்களை அண்ணன் அம்பலப்படுத்த, அதனால் அந்த அதிகாரியோடு வேறு சிலர் சிறைக்குச் செல்கின்றனர். அதன் தொடர்ச்சியாக, தம்பியின் வேலை பறிபோகிறது.
இந்த இடத்தில் இந்தக் கதை முடிந்து, வேறொரு கதை தொடங்குகிறது.
அந்த தம்பியை ஜார்க்கண்டில் உள்ள ஒரு பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்கிறார் அண்ணன். அங்குள்ள அதிகாரி, ‘நீங்களெல்லாம் நக்சல்களாக இருந்து சரணடைவது போல நடித்தால், நக்சல் புனர்வாழ்வு திட்டத்தில் உங்களுக்கு வேலை தருவோம்’ என்கிறார். அதற்கு அனைவரும் ‘சரி’ என்கின்றனர்.
ஆனால், அவர்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பதில்லை.
மாறாக, சரணடைந்தவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்ட அவர்கள் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர். அந்த காயம் ஆறும்போது, மீண்டும் பயிற்சி முகாமுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கும் பல வேதனைகள்.
அவற்றைக் கடந்து, எப்படியாவது சீருடை பணியாளராக மாறுவதே அங்கிருக்கும் பலருக்குக் கனவாக இருக்கிறது.
ஒருகட்டத்தில் அப்படித் தேர்வானவர்களில் சிலர் ‘நக்சல்கள்’ என்ற பெயரில் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகின்றனர்.
அந்த விஷயம் அந்த தம்பிக்கு தெரிய வந்ததா, அவர் என்ன செய்தார், அவருடன் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று சொல்கிறது ‘தண்டகாரண்யம்’ படத்தின் மீதி.
இந்த கதைகளைத் தாண்டி நாயகனின் காதல், குடும்பத்தினரின் பாசம், இரு வேறு நிலங்களில் அவர் எதிர்கொள்கிற அடக்குமுறைகள் எனச் சில கிளைக்கதைகளும் உண்டு.
இத்தனை கதைகளையும் திரைக்குள் திணிக்க முற்பட்டிருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை. அதனால், படம் பார்க்கிற நாம் எதனைப் பின்பற்றுவது எனக் குழப்பத்தில் தவிக்க வேண்டியிருக்கிறது.
அந்த குழப்பத்திற்கு முடிவு கட்டி, இந்த திரைக்கதையைச் செப்பனிட்டிருந்தால் ‘தண்டகாரண்யம்’ வழியாக இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாகப் புலப்பட்டிருக்கும்.

சிறப்பான உழைப்பு!
இந்தக் கதையில் அண்ணனாக தினேஷும் தம்பியாக கலையரசனும் நடித்துள்ளனர். அவர்களது ஜோடிகளாக முறையே ரித்விகா, வின்சு ரேச்சல் சாம் நடித்துள்ளனர்.
அவர்களது பாத்திரங்களின் வயதுக்கேற்ற தோற்றம், நடிப்பு எல்லாமே கனகச்சிதமாக வெளிப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நால்வரின் பங்களிப்பு ‘ஓகே’ ரகத்தை தாண்டியிருக்கிறது.
போலவே இதில் வரும் சபீர் கல்லாரக்கல், பால சரவணன், யுவன் மயில்சாமி, முத்துக்குமார், அருள்தாஸ் உள்ளிட்ட பலரது நடிப்பு சிறப்பாக உள்ளது.
இது போக நாயகர்களின் தாய் தந்தையாக வருபவர்கள் உட்படப் பலர் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா, படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே., கலை இயக்குனர் ராமலிங்கம் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் சிறப்பான உழைப்பைத் தந்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தந்திருக்கும் பாடல்கள் கேட்க இனிக்கின்றன. அவரது பின்னணி இசை, காட்சிகளில் மேலோங்கியிருக்கும் விஷயத்தை இன்னும் ஒருபடி உயர்த்துகிறது.
இப்படிச் சிறப்பான பங்களிப்பு இருந்தும், படம் முடிந்து வெளியே வரும்போது நமக்குத் திருப்தி கிடைத்ததா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும். காரணம், ஏற்கனவே சொன்னது போல நிறைய கதைகளை ஒரு திரை வடிவத்திற்குள் அடைக்க முயன்றது தான்.
படத்தொகுப்பாளரால் அதனைத் தடுத்துச் சரி செய்ய முடியாத அளவுக்கு காட்சியமைப்பு இருந்ததா எனத் தெரியவில்லை.
எழுத்து வடிவத்தில் மட்டும் திரைக்கதை இருந்தபோதே, அதனைச் சரி செய்திருந்தால் ஒரு ‘முழுமை’ இப்படைப்புக்குக் கிடைத்திருக்கும். அதில் இப்படக்குழு எதிர்கொண்ட சிக்கல் என்னவென்று தெரியவில்லை.
ஜார்க்கண்டில் உள்ள போலி பயிற்சி முகாமில் அப்பாவி இளைஞர்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதும், அவர்களில் சிலர் குயுக்தியான அதிகாரிகளால் கொல்லப்படுவதுமே இப்படத்தின் யுஎஸ்பி.
அதனால், அதனை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால் ‘தண்டகாரண்யம்’ வேறொரு உயரத்தை எட்டியிருக்கும். ரசிகர்கள் மத்தியில் ஒரு விவாதத்தை உருவாக்கியிருக்கும்.
அது மட்டுமல்லாமல், இந்தக் கதையில் தினேஷ் பாத்திரத்தை ‘ஸ்லோமோஷனில்’ காட்டி ‘ஹீரோயிசம்’ மிளிரச் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அதையும் செய்திருக்கிறது இந்தப் படம்.
அது போன்ற திணிப்புகள் மேலோங்கியிருப்பதே ‘தண்டகாரண்யம்’ படத்தின் பலவீனம். அவை ஒன்று சேர்ந்து, இந்த படத்தின் வழியே இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்ற கேள்வியே விஸ்வரூபம் பெறுகிறது.
பா.ரஞ்சித் தயாரிக்கும் படங்களில் இப்படியொரு குறை எனும்போது, ‘எதற்காக இந்த படம் உருவாக்கப்பட்டது’ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சிறப்பான உழைப்பு கொட்டப்பட்டிருந்தும் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகவில்லையே என்ற குறை உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை.