”அமெரிக்க துணை அதிபர் இந்தியப் பிரதமரை அழைத்து, பயங்கரவாத தாக்குதல் நடக்கப் போவதாகக் கூறுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என பாஜக அமைச்சர்களை நோக்கி பஹல்காம் தாக்குதல் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்றும், இன்றும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து காங்கிரஸ், திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சியின் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா பேசுகையில், “இந்திய ஒருமைப்பாட்டுக்காக திமுக அறியப்படுகிறது. எங்களை நீங்கள் தேச விரோதி என முத்திரைக் குத்த முடியாது. சீனா போரின் போதும், கார்கில் போரின் போதும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெரும் நிதியை வழங்கினார். இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல் பேரணி நடத்திய கட்சி திமுக தான்.
பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் கூறியதை நான் கேட்டேன். இந்தக் குரல்கள் அனைத்தும் உயர்ந்த குரலில் இருந்தாலும் உள்ளடக்கம் குறைவாகவே இருந்தன. எந்த விவகாரமாக இருந்தாலும் நேரு, இந்திரா, காங்கிரஸ் எனப் பேசுவதே பாஜகவினரின் வாடிக்கையாக உள்ளது. ஏன் ஒப்பீடு? அது எப்போதும் சரியானதல்ல. ஒரு பிரதமர் எடுக்கும் எந்த முடிவும் மறுபரிசீலனை செய்யப்பட்டு ஆராயப்பட வேண்டும். அண்டை நாடுகளுடன் போர் ஏற்பட்டபோது நேரு எதையும் மறைக்கவில்லை. ஆனால் பாஜக அதை மறைக்கிறது.
குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாலே வெற்றி எனக் கூறக் கூடாது. பஹல்காம் தாக்குதல் குறித்து உளவுப் பிரிவும், RAW அமைப்பும் பல முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்த பிறகும் அரசு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை. நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு இல்லை.
தவறு என்பது யார் ஆட்சி செய்தாலும் நடக்கக்கூடியது. 1999ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி 184 பயணிகள் இருந்த இந்திய விமானம் கந்தகாருக்கு கடத்தப்பட்டது. அப்போது பிரதமராக இருந்தவர் பாஜகவின் வாஜ்பாய் தான். அவர் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அதை எதிர்த்தவர் தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல் தான். ஆனால் வாஜ்பாய் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து செயலாற்றி பயணிகள் அனைவரையும் மீட்டுக்கொண்டு வந்தார். இதுதான் அந்த நேரத்தில் தேவைப்பட்ட நடவடிக்கை.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குழந்தை போல பேசுகிறோர். நேற்று அவர் பேசும்போது, “எத்தனை பென்சில் உடைந்தது என்று கேட்காதீர்கள்” என்கிறார். போரில் இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பதற்கு, இந்தியா வென்றதை பாருங்கள் என கூறுகிறார்.
மூன்று நாடுகளைத் தவிர்த்து, முழு உலகமும் பாகிஸ்தானை கண்டிப்பதாகக் கூறப்படுகிறது. உண்மை என்னவென்றால், இந்தியா அங்கம் வகிக்கும் ஜி20, ஜி7, பிரிக்ஸ் மட்டுமல்ல ஒரு நாடு கூட பாகிஸ்தானைக் கண்டித்து அல்லது இந்தியாவை ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. பயங்கரவாதத்தை அனைவரும் கண்டிக்கின்றனர். ஆனால் பாகிஸ்தானை அல்ல.
நேற்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், “பாகிஸ்தான் இந்தியாவை தாக்க போகிறது என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரித்தார்” எனக் கூறினார். அமெரிக்க துணை அதிபர் இந்தியப் பிரதமரை அழைத்து, தாக்குதல் நடக்கப் போவதாகக் கூறுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அதுவரை நமது உளவுத்துறை, ராவும் உறங்கிக் கொண்டா இருந்தது? உளவுத்துறை தோல்விக்கு ஒரு நடவடிக்கையாவது எடுக்கப்பட்டதா?
பஹல்காம் தாக்குதல் உளவுத்துறை தோல்வியால் நிகழ்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது நிர்வாகத்தின் திறமையின்மையையும் நாட்டை நிர்வகிக்க இயலாமையையும் காட்டுகிறது. இந்த நாட்டை ஆளுவதற்கு பாஜகவுக்கு தகுதியில்லை. அத்தகைய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
சர்வதேச நாடுகளுடன் உங்கள் உறவு எப்படி உள்ளது? நீங்கள் நேருவை பின்பற்ற வேண்டாம். அது உங்களால் முடியாது. அதற்கு தகுதியும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் பாஜக பிரதமரான வாய்பாயையாவது பின்பற்றுங்கள்.
கார்கில் போருக்குப் பிறகு, அதுகுறித்த விரிவான விவாதத்திற்காக ஒரு கமிஷனை நியமித்து அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இத்தகைய நியாயமான பிரதமர் உங்கள் முன்னோடி, ஆனால் நீங்கள் நாடாளுமன்றத்தைத் தவிர்க்கிறீர்கள்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமைச்சர்கள் இருவேறு கருத்துக்களை கூறி வருகின்றனா். ஒருவர், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனா். போர் முடிந்தது என்று கூறுகிறார். மற்றொரு அமைச்சர், ஆபரேஷன் இன்னும் முடியவில்லை என கூறுகிறார். இதில் எதை நம்புவது?
ஆபரேஷன் சிந்தூர் என போரைத் தொடங்கியது பிரதமர் மோடி என்றாலும், அதனை முடித்து வைத்தது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தானே?
உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறீர்கள். ஆனால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் உறுப்பினராக உள்ளது. இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இதற்கு பிறகாவது, இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன நடந்தது? என்ன செய்யலாம் என்பது குறித்து வெளிப்படையாக பேச வேண்டும்” என ஆ.ராசா பேசினார்.