திமுக கூட்டணியில் சிபிஎம் அதிக தொகுதிகளைக் கேட்டு வரும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபியை சென்னையில் சந்தித்து பேசினார்.
சென்னையில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: காம்ரேட் பேபி மாநிலங்களவையில் எனக்கு சக உறுப்பினர் மட்டுமல்ல, என் மீது எல்லையற்ற அன்பும் வாஞ்சையும் கொண்டவர். அண்மையில் நான் திருவனந்தபுரம் சென்று நாடாளுமன்ற இரு அவைகளில் நான் ஆற்றிய ஆங்கில உரைகளுக்கு அதைத் தொகுத்து அணிந்துரை வாங்குவதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கச் சென்றபோது, விமான நிலையத்திற்கே தொழிற்சங்கத் தலைவர்களையும் சட்டமன்ற உறுப்பினரையும் அனுப்பி வைத்து என்னை வரவேற்று, அருமைச் சகோதரர் பேபி அவர்கள் நானும் என்னோடு வந்தவர்களும் தங்குவதற்கு அரசு விருந்தினர் விடுதியிலே ஏற்பாடு செய்து, அவரும் அவரது துணைவியாருமே வந்து அன்றைய இரவு உணவருந்துவதற்காக அழைத்துச் சென்றபோது நிதி அமைச்சரும் அதிலே கலந்துகொண்டார்.
என் மீது மிகுந்த நட்பு கொண்டவர். எனக்கும் அவருக்கும் ஒரு ஒற்றுமை. அவர் பழைய திரைப்படப் பாடல்களைக் கேட்பது அவருக்கு நேரத்தைச் சற்று போக்குவதற்கான ஒரே ஒரு கருவி. நானும் அப்படித்தான். என்னுடைய வாகனத்திலோ, நான் படுத்திருக்கிற அறையிலோ ஒரு 900 பழைய பாடல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதைக் கேட்டுக்கொண்டே இருப்போம். இப்பொழுது அவரோடு உணவருந்தும்போது கூட அவர் உடனே நான் கேட்ட பாடல்களை… திருவிளையாடல், பாவ மன்னிப்பு, பாசமலர் என எல்லா பாட்டையும் எடுத்துப் போட்டார். ‘நீங்க செம்மீனைப் போடுங்க’ன்னேன். அவர் செம்மீன் பாட்டை எடுத்துப் போட்டார்.
இப்படிப்பட்ட நட்பு, அதனால அவர் வந்திருக்காருன்னு டிவியில பார்த்தேன். உடனே கிளம்பி வந்தேன். அவங்க முக்கியமான கூட்டங்கள் நடத்திட்டு இருக்காங்க. அவரைச் சந்தித்து ஒரு பொன்னாடை போர்த்திவிட்டு, ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்தேன்.. அவருடைய பணிகள் தொடரட்டும்.
முன்பு ஹர்கிஷன் சிங் சுர்ஜித், சிபிஎம் பொதுச்செயலாளராக இருந்த போது 20 முக்கிய தலைவர்களை அழைத்துக் கொண்டு என் வீட்டிற்கு வந்து நண்பகல் விருந்து சாப்பிட்டார். அதேபோல நீங்க வரணும்ங்கிற வேண்டுகோளை மட்டும் விடுத்தேன். கூட்டத்துக்குப் போயிட்டார் அவர். இதுதான் நடந்தது. ஒரு காபி கொடுத்தாங்க, குடிச்சிட்டு நான் போய்க்கிட்டு இருக்கேன்.
நீங்கள் கேட்கிற வேறு எந்தக் கேள்விக்கும் என்னிடமிருந்து எந்தப் பதிலும் வராது. நான் நண்பர்ங்கிறதால அவர் பாலைவனத்தில் இருந்தாலும் பார்ப்பேன், பசுஞ்சோலையில் இருந்தாலும் பார்ப்பேன். நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவன். நட்புதான் நான் சேகரித்த உயர்ந்த செல்வம் என் வாழ்க்கையில. அப்படிப்பட்ட நண்பர் மிஸ்டர் பேபி. அவர் இங்க வந்திருக்காருங்கிறதுனால அவரை ஒரு நிமிடம் சந்திச்சுட்டு போகணும்கிறதுக்காக வந்தேன். எந்தக் கருத்தும் நான் அரசியல் சம்பந்தமாக இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலக வளாகத்திற்குள் சொல்ல மாட்டேன். இவ்வாறு வைகோ கூறினார்.
