ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.
17-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் இடம் பெற்றன.
சூப்பர் 4 சுற்றில் இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (செப்டம்பர் 24) துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில் 29 ரன்கள் எடுத்த சுப்மன் கில் அவுட் ஆனார். அபிஷேக் சர்மாவுடன் ஷிவம் துபே கை கோர்த்தார். ஆனால் ஷிவம் துபே, கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.
வங்கதேசம் அணி தொடக்கம் முதலே வெற்றிக்கான ஸ்கோரை எட்டுவதற்கு போராடிப் பார்த்தது. ஆனால் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இறுதிப் போட்டியில் இந்திய அணி நுழைந்துள்ளது.