17-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 8 அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளன.
ஏ பிரிவில் இந்தியா (நடப்பு சாம்பியன்), பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பெற்றுள்ளன.
பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் உள்ளன.
இந்த போட்டிகளில் 2-வது நாளான இன்று (செப்டம்பர் 10) ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்து வீச்சை (பவுலிங்) தேர்வு செய்தார். இதனையடுத்து அமீரகம் அணி பேட்டிங் செய்தது.
அமீரகம் அணியின் தொடக்க வீரர்களாக அலிஷான் ஷரபு, முகமது வசிம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் 22 ரன்கள், 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து ஆட வந்த அமீரக வீரர்கள், இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகிக் கொண்டே இருந்தனர்.13.1 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அமீரக அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி பேட்டிங் விளையாடியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக, அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கி ஆடினர். ஆட்டத்தின் தொடக்கம் முதல் இருவரும் அமீரகத்தின் பந்துகளை விளாசித் தள்ளினர். 30 ரன்கள் எடுத்த நிலையில் அபிஷேக் ஷர்மா அவுட் ஆனார். பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினர்.
இந்திய அணி 4.3-வது ஓவரிலேயே 60 ரன்களை அடித்து வெற்றி இலக்கை தாண்டியது. அப்போது சுப்மன் கில் 20 ரன்களையும் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களையும் எடுத்திருந்தனர். ஐக்கிய அரபு அமீரக அணியை இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி எளிதான வெற்றியைப் பெற்றது.