17-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை ‘சூப்பர் ஓவரில்’ வீழ்த்தி ‘திரில்’ வெற்றியைப் பெற்றது இந்திய அணி.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் சூப்பர் 4 சுற்றில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.
இறுதிப் போட்டிக்குள் நுழைந்த போதும் இந்திய அணி நேற்று (செப்டம்பர் 26) இலங்கை அணியை சூப்பர் 4 சுற்றில் எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல் ஆகியோர் நிலைத்து விளையாடி ரன்களைக் குவித்தனர்.
அபிஷேக் சர்மா 61 ரன்கள், திலக் வர்மா 49 ரன்கள், சஞ்சு சாம்சன்39 ரன்கள், அக்சர் படேல் 21 ரன்களை எடுத்தனர்.
சுப்மன் கில் 4 ரன்களிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் அவுட் ஆகினர்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்களை எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது.
இலங்கை அணியின் பதும் நிசங்கா அதிரடியாக விளையாடி 107 ரன்களைக் குவித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் குசால் பெரேரா அரை சதம் கடந்து 58 ரன்களை எடுத்தார். தசுன் சன்கா 22 ரன்களை எடுத்திருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியும் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்களை எடுத்து சமன் செய்ததால் ஆட்டம், பரபரப்பான கட்டத்துக்கு நகர்ந்தது.
இதனால் 6 பந்துகள் கொண்ட சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இலங்கை அணியின் குசால் பெரேரா. தசுன் சன்கா அவுட் ஆக கமிண்டு மெண்டிஸ் 1 ரன் மட்டுமே எடுத்தார். எக்ஸ்ட்ரா 1 ரன்கள் கிடைக்க சூப்பர் ஓவரின் 5 பந்துகளில் 1 விக்கெட்டை இழந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை அணி.
இதனையடுத்து இந்திய அணி சூப்பர் ஓவரை எதிர்கொண்டது. இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி சூப்பர் ஓவரில் ‘திரில்’ வெற்றியைப் பெற்றது.