இந்தியாவின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிரிந்து செல்ல வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் 765 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தவர்.
ஐபிஎல் தொடரில் மொத்தம் 18 சீசன்களில் விளையாடியுள்ள அவர் 221 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தனது முதல் 8 சீசன்களை (2008-2015) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார்.
அதன்பின்னர் 2016 முதல் 2024ஆம் ஆண்டு வரை டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் வெவ்வேறு அணிக்காக விளையாடினார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 9.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். எனினும் 9 போட்டிகளில் விளையாடிய அவர் 7 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி ஏமாற்றமளித்தார்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு அவர் விலக உள்ளதாக கிரிக்பஸ் செய்தி வெளியிட்டது. எனினும் இதற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
அதே நேரம் 38 வயதான அனுபவ பவுலர் தொடரில் நீடிப்பாரா அல்லது வேறொரு அணிக்கு வர்த்தகம் செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக கேப்டன் தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உயர்மட்ட சிஎஸ்கே அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் டிசம்பரில் நடைபெற உள்ள மினி ஏலத்தை முன்னிட்டு அடுத்த சீசனுக்கான அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் தன்னை விடுவிக்குமாறு அணி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு ஒருநாள் கழித்து அஸ்வின் விலகல் குறித்து செய்தி வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.