ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், விநாயகர் சதுர்த்தி தினமான இன்று (ஆகஸ்ட் 27) ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மூத்த சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள், ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது, ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றி விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது.
பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் வழங்கிய உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகத்திற்கும், அனைத்து உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். சிறப்பு நாள், எனவே ஒரு சிறப்பு ஆரம்பம்🙏” என அதில் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் சிஎஸ்கே அணியில் இருந்து விலக உள்ளதாக ஏற்கெனவே இந்த மாத தொடக்கத்தில் ’சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு விலகும் அஸ்வின்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
கடந்த சீசனில் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் விமர்சனத்தை சந்தித்தது. இதனையடுத்து இளம் வீரரகள் கொண்ட திறமையான அணியை உருவாக்கும் பணியில் அணி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் மினி ஏலத்தில் எந்தெந்த வீரர்களை விடுவிப்பது, யாரை சேர்ப்பது என தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 9.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்ட அஸ்வின், 9 ஆட்டங்களில் விளையாடி வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.
இதனையடுத்து மூத்த வீரரான அவரை விடுத்து, இளம் வீரரை தேர்ந்தெடுக்கும் பணியில் சிஎஸ்கே அணி தீவிரம் காட்டி வந்தது.
இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரில் திடீரென இன்று ஓய்வை அறிவித்து முழுமையாக வெளியேறியுள்ளார் அஸ்வின்.

அஸ்வின் – ஐபிஎல் பயணம்!
எனினும் அவரது சாதனை பயணம் ஐபிஎல் தொடரில் மிக நீண்டதாகவே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
🔴2009 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் லீக்கில் அறிமுகமானார் ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின்.
🔴சென்னை மட்டுமின்றி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய பல அணிகளுக்காக மொத்தம் 221 போட்டிகளில் பங்கேற்று 187 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
🔴ஐபிஎல்லில் ஐந்தாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக அவர் உள்ளார்.
🔴2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணி சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பை வென்றதில் அஸ்வின் முக்கிய பங்கு வகித்தார். 2010 ஆம் ஆண்டில் சிஎஸ்கேவின் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் 13 விக்கெட்டுகளை எடுத்து அஸ்வின் தொடரின் வீரர் விருதை வென்றார்.
🔴2009 இல் அறிமுகமானதிலிருந்து 2015 சீசன் வரை, அஸ்வின் சிஎஸ்கே அணிக்காக விளையாடி மொத்தம் 90 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
🔴2016 ஆம் ஆண்டில், சிஎஸ்கே தடை விதிக்கப்பட்டபோது, அவர் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் விளையாடினார். பின்னர் காயம் காரணமாக 2017 சீசனைத் தவறவிட்டார்.
🔴2018 ஆம் ஆண்டில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 7.60 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்ட அவருக்கு, கேப்டன் பதவியை வழங்கப்பட்டது. அந்த அணிக்காக இரண்டு சீசன்கள் ஆடிய அவர் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
🔴2020ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸுக்கு வர்த்தகம் செய்யப்பட்ட அவர், அந்த அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாடினார்.
🔴2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை 5 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
🔴2025ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருந்த நிலையில், ஒரு சீசன் மட்டுமே விளையாடி ஓய்வை அறிவித்துள்ளார் அஸ்வின்.