நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வைக்கப் பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் நள்ளிரவில் திரண்டு வந்து தடுத்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் அதிகாரத் திமிரா? தோல்வி பயமா? என தவெக கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (ஜனவரி24) அவர் தனது எக்ஸ் பதிவில், “அதிகாரத் திமிரா? தோல்வி பயமா?
திருச்செங்கோட்டில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, முறைப்படி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வரவேற்பு பதாகைகளை (Banners), எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகார பலத்தைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.
தகவல் அறிந்து நேரில் சென்று தடுத்து நிறுத்தினேன். “எந்த விதியின் அடிப்படையில் அகற்றுகிறீர்கள்?” என்று காவல்துறையிடம் கேட்டால் பதிலே இல்லை! காரணமே இல்லாமல் எங்கள் பதாகைகளை அகற்றுவது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோகம்!
இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை!
எத்தனை தடைகள் போட்டாலும், மக்களின் ஆதரவோடு அதை உடைத்தெறிவோம்!
நாங்கள் விதை… புதைக்க நினைத்தால் முளைப்போம்”என குறிப்பிட்டுள்ளார்.
