அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’ திரைப்படம் சமீபத்தில் ‘ரீரிலீஸ்’ செய்யப்பட்டு, குறிப்பிட்ட அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
’என்னை அறிந்தால்’, ‘குற்றம் 23’, ’தடம்’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘ஓ மை டாக்’, ‘மிஷன் சேஃப்டர் 1’ எனப் பல படங்கள் வழியே ரசிகர்களைக் கவர்ந்தாலும், இன்றும் அவர் ஒரு ‘அண்டர்ரேட்டட் ஆக்டர்’ ஆகக் கருதப்படுவது வருத்தம் தருகிற விஷயம் தான். அந்த எண்ணத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடுகிற வகையில் அவர் நடித்த ‘இட்லி கடை’ விரைவில் வெளிவர இருக்கிறது.
அது போக ‘பார்டர்’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்கள் நீண்ட காலக் காத்திருப்பிற்கு பிறகு வெளியாக இருக்கின்றன. அந்த வரிசையில் முந்தியிருக்கிறது ‘ரெட்ட தல’.
’மான் கராத்தே’, ‘கெத்து’ படங்களை இயக்கிய கிரிஸ் திருக்குமரன் இதனை இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் டீசர் இப்போது வெளியாகியிருக்கிறது.
இப்படத்தின் கதை கோவாவில் இருக்கிற சில கேங்க்ஸ்டர்களின் வாழ்வை மையப்படுத்தியதாக அமைக்கப்பட்டிருப்பது அதில் தெரிய வருகிறது. மல்பே உபேந்திரா எனும் மையப்பாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருப்பதும் லேசாகப் பிடிபடுகிறது. ஓரளவுக்கு ‘மீகாமன்’ பாணியில் இப்படம் இருக்குமென்ற எதிர்பார்ப்பை ‘டீசர்’ தந்திருக்கிறது.
’வெந்து தணிந்தது காடு’ சிதி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்தில் ஹரிஷ் பேரடி, ஜான் விஜய், ‘பயர்’ பாலாஜி முருகதாஸ், யோக் ஜபீ, யோகேஷ் சாமி எனப் பலர் இடம்பெற்றுள்ளனர்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் சரிவர ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பானதொரு ‘ஆக்ஷன் த்ரில்லர்’ பார்த்த உணர்வை நிச்சயம் தரும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது ‘ரெட்ட தல’ டீசர்.
ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனராக இருந்த கிரிஸ் திருக்குமரன் தனது முந்தைய படங்களை ‘ஸ்டைலிஷாக’ உருவாக்கிய அளவுக்குச் சுவாரஸ்யமானதாக மாற்றவில்லை. அந்த குறை இதில் இருக்காது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியிருக்கிறது.
இதில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், வெவ்வேறு கெட்டப்களில் நடிக்க அவர் மெனக்கெட்டிருப்பதை உணர்த்துகிறது இப்பட டீசர்.
அதுவே யாரும் எதிர்பாராத ஒரு ஆச்சர்யத்தை இப்படம் தருமென்ற எண்ணத்தையும் கெட்டிப்படுத்துகிறது.