அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “ரெட்ட தல”.
25ஆம் தேதி படம் ரிலீஸ். நேரம் நெருங்குது. மக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும் அல்லவா? (இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட ரிலீஸ் செய்வதுதான் பெரிய வேலை. ஆனா ஒழுங்கா எடுத்தால், மக்களின் பாராட்டே பெரிய விளம்பரம்தான். அது வேறு விஷயம் )
படத்தின். முன் வெளியீட்டு நிகழ்வு!
இயக்குனரின் குருநாதர் ஏ ஆர் முருகதாஸ், “திருக்குமரன் என்னுடைய உதவி இயக்குனர். கஜினி, துப்பாக்கி படத்தில் பணி புரிந்தார் எனக்கு மிகவும் பிடித்தமானவர். மிகவும் திறமைசாலி, இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது தான். அதைக் கேட்டதும் கண்டிப்பாக கொடுப்பேன் என்று அவருக்கு தெரியும். இந்தப் படத்திற்கு அது சரியாக பொருந்தியுள்ளது. கூடிய விரைவில் என்னுடைய தயாரிப்பிலும் ஒரு படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அருண் விஜய் 15 வருடங்களுக்கு பின்னும் அதே போல, இன்னும் அப்படியே இளமையாக இருக்கிறார். மிகப்பெரும் ஆச்சர்யம்தான். அவர் ஒரு கடின உழைப்பாளி என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. தமிழ் சினிமாவில் அவருக்கு இன்னும் பெரிய இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன். “என்றார்.
இயக்குநர் கிஷோர் முத்துராமன், “இந்தப் படத்தின் தலைப்பில் அஜித் சாரை வைத்து, இயக்குநர் முருகதாஸ் இயக்குவதாக நிறைய செய்திகள் கேட்டேன். இன்று அதே பெயரில் அருண் விஜய்யை வைத்து, இயக்குநர் திரு இயக்கியுள்ளார். “என்றார்.
வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீசுக்குப் பிறகு, தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை சிதி இட்னானி. அடுத்து நடித்த காதர் பாச்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் பாட்சா பலிக்கவில்லை. அடுத்து நடித்த நூறு கோடி வானவில் வெளிவரவில்லை.
“என்னுடைய முதல் படத்திற்கு பிறகு நான் கொஞ்சம் ரிலாக்ஸாக மாறி விட்டேன் என்று நினைக்கிறேன். அந்த எண்ணத்தை இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விட்டு விட்டேன். இனிமேல் தேடலுடன் பணியாற்ற போகிறேன் நானும் தமிழ் கற்றுக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் முழுவதுமாக கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன்”என்றார் சிதி இட்னானி..
நடிகர் அருண் விஜய், ” படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது நன்றாகவே வந்துள்ளது. கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும். தனுஷ் சார் ஒரு பாடலைப் பாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. “என்றார்.
ரெட்டத் தல…. படம் நல்லா இருந்தா டபுள் தமாகா.
இல்லன்னா…? ரெட்ட தலைவலி.
நல்லதே நடக்கட்டும்!
— ராஜ திருமகன்
