பாண்டிச்சேரியில் சிறு வயது முதல் பழகிய காளி (அருண் விஜய்) என்பவனும் ஒரு பெண்ணும் ( சிதி இத்னானி) காதலிக்கிறார்கள். ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் அவன் அவளைப் பார்க்க வர, இருவருக்கும் இடையில் வறுமை ஒரு பெரிய சுவரை எழுப்பி இருப்பது புரிகிறது.
பணம் இல்லாமல் கஷ்டப்படும் அவள் ‘இனிமேலும் இந்த காதலால் பயனில்லை. நான் பிரான்ஸ் போய் சம்பாதித்துப் பிழைத்துக் கொள்கிறேன்’ என்கிறாள்.
மனமுடைந்த காளி, தன்னைப் போலவே இருக்கும் உபேந்திரா (இன்னொரு அருண் விஜய்) என்பவனை சந்திக்கிறான்.
உபேந்திராவுக்கு காளியின் காதல் பிரிவு தெரியவர, தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்… மற்றும் ஏராளமான பணம் உள்ள தனது வங்கிக் கணக்கு அட்டை ஆகியவற்றைக் காளி கையில் கொடுத்து, ”உன் காதலி ஆசைப்பட்டபடி சில நாள் கொண்டாடி விட்டு வா” என்கிறான் உபேந்திரா.
அப்படியே காளியும் அவன் காதலியும் கொண்டாட, ஒரு நிலையில் காதலியிடம் உண்மையைச் சொல்கிறான் காளி. ‘பேசாமல் உபேந்திராவை போட்டுத் தள்ளி விட்டு நீ உபேந்திராவாகவே மாறி விடு. நாம் செல்வச் செழிப்போடு வாழலாம்” என்கிறாள் காதலி.
அப்படியே உபேந்திராவை கொல்கிறான் காளி.

காளி உபேந்திராவாக மாற முயலும்போதுதான், உபேந்திரா கோவாவில் பெரிய தாதா என்பது தெரியவருகிறது. தனக்கு எதிர் அணியாக செயல்பட்ட ரெட்டி குரூப்பில் ஒருவனை ( பாலாஜி முருகதாஸ்) கொன்று இருப்பதும் , கொல்லப்பட்டவனின் மனைவி (தான்யா ரவிச்சந்திரன்) , அப்பா , மற்றும் உறவினர்கள் உபேந்திரவைக் கொல்லத் துடிப்பதும் காளிக்குப் புரிகிறது. உபேந்திராவுக்கு ஒரு காதலி கோவாவில் இருப்பதும் தெரிகிறது..
தவிர உபேந்திரா பாண்டிச்சேரி வந்ததே ஒரு வழக்கில் நாற்பத்தைந்து நாள் பாண்டிச்சேரியில் தங்கி, தினமும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடத்தான் என்பதும் புரிகிறது.
ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு முன்பே காளியின் காதலி மீது ஒரு கண்.
ஒரே நேரத்தில் கொலை வெறி தாதாக்கள், போலீஸ் இவர்களுக்கு இடையில், வான்டட் ஆக வண்டியில் ஏறிச் சிக்கிய காளிக்கு என்ன ஆனது? அவனது காதல் என்ன ஆனது? என்பதே,
BTG யுனிவர்சல் சார்பில், பாபி பாலச்சந்திரன் தயாரிக்க, அருண் விஜய், சிதி இத்னானி , தான்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரீஷ் பெராடி நடிப்பில், கிரிஷ் திருக்குமரன் இயக்கி இருக்கும் . ரெட்ட தல. (ஒண்ணும் பெருசா கவலைப்பட வேண்டாம். படம் எடுத்தவங்களே கவலைப்படல. நமக்கு என்ன?)
படத்தின் தயாரிப்புத் தரம் அருமை. எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு செலவு செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
படத்தின் மேக்கிங் பிரமாதமாக இருக்கிறது. கிரிஷ் திருக்குமரனின் ஷாட்கள், ஃபிரேம்கள், வண்ணப் பயன்பாடு ஆகியவை மிக அருமை.
சாம் சி எஸ் சின் பின்னணி இசையும், டோஜி டோமியின் ஒளிப்பதிவும் அட்டகாசம் . இருவரும் தங்கள் பங்குக்கு அசத்தி இருக்கிறார்கள். அருண் சங்கர் துரையின் கலை இயக்கமும் சிறப்பு.
.
ஆரம்பக் காட்சிகளில் சிதி இத்னானியை, தந்தத்தில் கடைந்த சிலை போல காட்டுவதிலும், அருண் விஜய்யின் தோற்றத்திலும் அசத்தி இருக்கிறார் உடை அலங்கார நிபுணர் கிருத்திகா சேகர். சபாஷ் கிருத்திகா.
பி.சி. ஸ்டண்ட்ஸின் சண்டை இயக்கமும் அருமை.
இரண்டு விதமான கெட்டப்களில் ஒற்றுமையும் வேற்றுமையுமாக, சிறப்பாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் அருண் விஜய். சண்டைக் காட்சிகளில் அசத்தல். நடிப்பை பொறுத்தவரை அவர் ஒன்றும் வைத்துக் கொண்டு வஞ்சனை செய்பவர் இல்லை.
பேராசை மிக்க காதலியாக, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் கேரக்டரில் (ம்ஹும். அது இல்ல. அப்படி இல்ல..) ஒரு ரிதம் போன்ற நடிப்பை அலட்டிக் கொள்ளாமல் தருகிறார் சிதி இத்னானி. அழகு.
மற்றவர்கள் எல்லாம் ஓகே ரகம்.

ஜான் விஜய் தான் வழக்கம் போல மோசமான இன்ஸ்பெக்டராக வந்து இதுவரை எல்லா படங்களிலும் நடித்தது போல எரிச்சலூட்டும் நடிப்பை இந்தப் படத்திலும் வழங்கி இருக்கிறார்.
படத்தின் கதை திரைக்கதைதான் ‘படுத்தே விட்டான்யா..” லெவலிலேயே ஆரம்பத்தில் இருந்தே விழுந்து கிடக்கிறது. சிறு வயது நேசம், காதலித்தது , பிரிந்தது பின் ஐந்து வருடம் கழித்து அருண் விஜய் வருவது என்ற கதைப் போக்கில்,
எந்த அழுத்தமும் உணர்வுப்பூர்வமும் ஏற்படும் வகையில் காட்சிகள் எழுதப் படவில்லை.
எனவே ஐந்து வருடம் கழித்து வந்த காளியிடம் அவன் காதலி பணம் இல்லாமல் வாழ முடியாது என்று சொல்லும்போது, இட்ஸ் ஓகே .. நோ ப்ராப்ளம் என்ற உணர்வே படம் பார்ப்போருக்கு ஏற்படுகிறது.
உபேந்திராவை கொன்று விடு என்று சொல்லும்போது சிதி இத்னானியின் கேரக்டர் சொர்ணக்கா போலவும் காளியின் கேரக்டர் பட்டாசு பாலு போலவும் ஆகி விட்டது.
எல்லாருமே அயோக்கியர்கள் என்று ஆன பிறகு, அவர்கள் காதல் சேர்ந்தால் என்ன சேராவிட்டால் என்ன என்ற- படத்தில் காட்டப்படும் புத்தரின் ஓவிய முகம் போல – ஒரு ஜென் நிலைக்கு ரசிகன் போய் விடுகிறான்.
உபேந்திரா மரணம் என்பதில் ஏதாவது டுவிஸ்ட் கொடுத்து திரைக்கதையில் சுவாரஸ்யம் ஏற்றுவார்கள் என்று நினைத்தாலும் உபேந்திரா செத்தவன் செத்தவன்தான்.
உபேந்திராவின் கோவா காதலியாவது திரைக்கதைக்குள் எதையாவது செய்வார் என்றால் அந்த சவலைப் பிள்ளையும் சடுதியில் செத்துப் போகிறாள்.

கணவனைக் கொன்ற உபேந்திராவை கொல்லக் கிளம்பும் தான்யா ரவிச்சந்திரனுக்கு பில்டப் எல்லாம் அதிகமாக இருக்க, ஏதோ செய்வாரா இருக்கும் என்று எதிர்பார்த்தால் அவர் நாலஞ்சு முறை இப்படியும் அப்படியும் நடப்பதோடு சரி, கேட் வாக் முடிந்த பூனை போல எங்கோ பதுங்கி விட்டார்.
எனில் எதுக்கு அவ்வளவு பில்டப்? பேசாமல் அதை எல்லாம் வெட்டி எறிந்திருக்கலாமே? தான்யா ரவிச்சந்திரனை இப்படி ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக்கியது நியாயமா?
ஆரம்பத்தில் சில காட்சிகளில் வசனம் அட போடும் அளவுக்கு சிறப்பாக இருந்தது. ஆனால் ஒரு சில காட்சிகள்தான். பிரசவ வைராக்கியம் மாதிரி. அப்புறம் வழக்கமான உருட்டு உருட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
கதை முடிந்தால் பத்து நிமிடத்துக்குள் திரைக்கதை முடிய வேண்டும். திரைக்கதை முடிந்தால் கதையைப் பொறுத்தவரை ஐந்து நிமிடத்துக்குள் படம் முடிய வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் படம் முடிந்த பிறகும் அருண் விஜய் யாரோடாவது சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்.
மொத்தத்தில் ரெட்டைத் தல.. முண்டம்
— ராஜ திருமகன்
