அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 – 20011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார் மூத்த அமைச்சர் துரைமுருகன். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருவரையும் வேலூர் நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் துரைமுருகன் சார்பில், “லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகள், வழக்கு காலகட்டத்துக்கு முன்பு வாங்கப்பட்டவை. துரைமுருகன் மனைவி தனிப்பட்ட வருவாய் ஈட்டுபவர். அதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஆனால், அவரை இல்லத்தரசி எனக் கூறி, அவருக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரங்கள் இல்லை என்று வழக்குப்பதியப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உரிய ஆதாரங்கள் இருப்பதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
தற்போது சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
ஆனால் அமைச்சர் துரைமுருகன் இன்று (செப்டம்பர் 4) ஆஜராகவில்லை. அவரது மனைவி ஆஜராகி பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரினார்.
இதனால் துரைமுருகன் மனைவிக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் மட்டும் ரத்து செய்யப்பட்டது.
துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை வருகிற 15ஆம் தேதி அமல்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துரைமுருகனுக்கு இடது கையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.