ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிசிஐ டி முறையாக விசாரிக்கவில்லை என கூறி வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.
இந்த மனு இன்று (நவம்பர் 19) நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஒவ்வொரு வழக்கிலும் சிபிஐ விசாரணை கோருவதை ஏற்க முடியாது என்று கூறினர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர்.
முன்னதாக தமிழக அரசு முதல்முறை சிபிஐ விசாரணையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இரண்டாம் முறை தாக்கல் செய்த மனுவை விசாரித்து இடைக்கால தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
