“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கையின் போது, பொதுமக்களிடம் ஒடிபி பெறக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூலை 21) உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் திமுகவுக்கு நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். arguement in the case against dmk
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் தாக்கல் செய்த மனுவில், “ஆளும் கட்சியான திமுக வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்காக பொது மக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு துன்புறுத்துகின்றனர்.
எங்கள் வீட்டுக்கு திமுகவினர் 10 பேர் வந்தனர். அவர்கள் எங்கள் அனுமதி இல்லாமல், முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ‘ஓரணியில் தமிழ்நாடு ‘ என்று அச்சிடப்பட்ட சுவரொட்டியை ஒட்டினர்.
அதோடு எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்டனர்.
இதை தர மறுத்ததால், குடும்பப் பெண்கள் மாதம்தோறும் அரசிடமிருந்து பெறும் ஆயிரம் ரூபாயை நிறுத்தி விடுவோம் என்று மிரட்டினார்கள்.
அதுமட்டுமின்றி அனைவரின் செல்போன் எண்களை பெற்றனர். பின்னர் எங்களுக்கு ஒரு ஒடிபி வந்தது. அந்த ஒடிபியை தெரிவித்ததும் திமுகவில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது.
இவ்வாறு மக்களை திமுகவில் சேர வற்புறுத்தி வருகின்றனர். சேராமல் போனால் அரசு திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்படும் என்று மிரட்டுகின்றனர்.
அரசியல் நோக்கங்களுக்காக ஆதார் தகவல்களை சேகரிக்க எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அரசியல் பிரச்சாரத்துக்காக தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது.
பொது மக்களின் தனிப்பட்ட விவரங்களை கூறுவது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தனி உரிமைகளை மீறும் செயலாகும்.
எனவே திமுகவினர் அரசியல் பிரச்சாரத்துக்காக பொதுமக்களிடமிருந்து ஆதார் விவரங்களை சேகரிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும்.
திமுகவினர் இதுவரை சேகரித்த ஆதார் மற்றும் தனிப்பட்ட விவரங்களை உடனடியாக அழிக்க உத்தரவிட வேண்டும்.
ஆதார் உள்ளிட்ட விவரங்கள் சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமைச் செயல் அதிகாரி விசாரணை நடத்தி திமுக பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மகேந்திரன், பாரதி கண்ணன் ஆகியோர் ஆஜரானார்கள்.
அவர்கள், “ஆதார் உள்ளிட்ட விவரங்கள் திமுக உறுப்பினர் சேர்க்கையின் போது கேட்கப்படுகின்றன. பின்னர் செல்போன் எண்ணுக்கு வரும் ஒடிபியை கேட்கின்றனர். திமுக உறுப்பினராக இல்லையெனில் மகளிர் உரிமைத்தொகை போன்ற சலுகைகள் கிடைக்காது எனவும் மிரட்டுகின்றனர்” என்று கூறி அது தொடர்பான வீடியோவை தாக்கல் செய்தனர்.
அப்போது ஒடிபி எதற்காக கேட்கப்படுகிறது? ஒடிபி உள்ளிட்ட விவரங்களை கேட்க கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தி வரும் போது எதற்காக பொதுமக்களிடம் இருந்து கேட்கிறீர்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசுத் தரப்பில் வழக்கறிஞர் வீரக்கதிரவன், திலக்குமார் ஆகியோர் ஆஜராகி, திமுகவினர் பிரச்சாரத்துக்காக ஒடிபி கேட்கின்றனர் என தெரிவித்தனர்.
இதை கேட்ட நீதிபதிகள், நீங்கள் அரசு தரப்பு வழக்கறிஞர்களா? இல்லை திமுக வழக்கறிஞர்களா? என காட்டமாக கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, தனிநபரின் விவரங்களை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை. தனிநபர் விவரங்களை சேகரிக்க தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். எனவே ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது ஒடிபி பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தையும் தாமாக முன்வந்து இணைத்த நீதிபதிகள் டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். arguement in the case against dmk