“கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்ற நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என இன்று (ஜூன் 3) அறிவுறுத்தியுள்ளது. are you linguist?- Karnataka HC slams Kamalhaasan
கடந்த 24ஆம் தேதி நடந்த இசை வெளியீட்டு விழாவில் ‘தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்’ என கமல் பேசியது சர்ச்சையானது.
அவருக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்த நிலையில், அதற்கு ஆதரவாக தக் லைஃப் பட வெளியீட்டைத் தடை செய்வதாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை (KFCC) கடந்த மே 30ஆம் தேதி அறிவித்தது.
இதனையடுத்து வரும் ஜூன் 5ஆம் தேதி எந்தவித இடையூறுமின்றி தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கோரியும், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரியும் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி எம். நாகபிரசன்னா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
தவறாக புரிந்துகொள்ளப்பட்டது! are you linguist?- Karnataka HC slams Kamalhaasan
அப்போது ராஜ்கமல் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா, “பட விழாவில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமாரை நோக்கி பேசியதன் ஒரு சிறிய பகுதி. அவரும் ’கமல் எப்போதும் கன்னடத்தைப் பற்றி உயர்வாகப் பேசுவார்’ என்பதை தெளிவுபடுத்தினார்.
கமலின் கருத்துக்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களுக்கு இடையேயான அன்பையும் தோழமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. ஆனால் ஒரு சிலரால் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அது யாரையும் புண்படுத்தும் நோக்கில் இல்லை” என வாதிட்டார்.
கலவரச்சூழல் ஏற்பட்டுள்ளது!
அதற்கு நீதிபதி, “எந்தவொரு குடிமகனுக்கும் மற்றவரின் உணர்வுகளை புண்படுத்த உரிமை இல்லை. நீர், நிலம், மொழி இந்த மூன்று விஷயங்களும் குடிமக்களுக்கு முக்கியம். மொழி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுடன் இணைக்கப்பட்ட ஒரு உணர்வு. அதை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் நீங்கள் பேசிவிட்டீர்கள்.
ஒரு பொது நபர் இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டால் என்ன ஆகும்? எந்த மொழியும் இன்னொரு மொழியிலிருந்து பிறக்க முடியாது – அதற்கான ஆதாரம் எங்கே? எந்த அடிப்படையில் பேசினீர்கள்? நீங்கள் ஒரு வரலாற்றாசிரியரா அல்லது மொழியியலாளரா?
நீங்கள் அவ்வாறு பேசியதால் தற்போது கலவரச்சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் மன்னிப்பு தானே கேட்டார்கள்? ஆனால் நீங்கள் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறி கர்நாடக மக்களின் உணர்வுகளை நீங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளீர்கள்” என்றார்.
மன்னிப்பு கேட்காமல் கர்நாடகாவில் படம் ஏன் ஓட வேண்டும்?
மேலும் அவர், “இப்போது நீங்கள் வணிக நலனுக்காக இங்கே மனு தாக்கல் செய்துள்ளீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பதற்ற சூழ்நிலைக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
நீங்கள் மன்னிப்பு கேட்டால் எல்லாம் தீர்ந்திருக்கும். நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கர்நாடகாவில் படம் ஏன் ஓட வேண்டும் என விரும்புகிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள். கருத்து சுதந்திரம் என்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதற்காக அல்ல.
கர்நாடகாவிலிருந்தும் நீங்கள் சில கோடிகளை சம்பாதிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் (கமல்ஹாசன்) ஒரு சாதாரண மனிதர் அல்ல… சாதாரண மக்களும் கூட இதுபோன்ற சர்ச்சை பேச்சிற்காக வழக்குகளை எதிர்கொள்கிறார்கள். நீங்கள் பேசியதை ஒப்புக்கொள்கிறீர்கள், ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுகிறீர்கள்..
மன்னிப்பு கேட்பது குறித்து கமலுக்கு ஆலோசனை வழங்குமாறு மனுதாரரின் வழக்கறிஞக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி ஒத்தி வைத்தார்.