திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல் தூணை இன்று(டிசம்பர் 10)தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் யதீஷ் குமார், உதவி இயக்குனர் லோகநாதன் ஆகியோர் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கிய விழாவாக கார்த்திகை தீபத் திருவிழா உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா உள்ளது. கல் தூணுக்கும் தர்காவுக்கும் குறைந்த இடைவெளி இருப்பதாகவும், அங்கு தீபம் ஏற்றும்பட்சத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கல் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் கோயில் நிர்வாகம் மரபுப்படி மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றியது.
இதையடுத்து அங்கு திரண்ட பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி சிஐஎஸ்எப் வீரர்களுடன் சென்று தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் தமிழக காவல்துறை இதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய ஆய்வு 3 மணி நேரம் வரை நடந்தது. இந்த ஆய்வில் விசாரணைக்கு தேவையான தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆய்வு நடத்தப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
