ரூ79,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் குழுமம் Defence Acquisition Council (DAC) ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று (டிசம்பர் 29) பாதுகாப்பு கொள்முதல் குழுமத்தின் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான 79,000 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவுகளுக்கான லாய்ட்டர் வெடிமருந்து அமைப்பு, குறைந்த உயர இலகுரக ரேடார்கள், பினாகா ராக்கெட் லாஞ்சர் அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிந்து தாக்கும் அமைப்பு போன்ற உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
லாய்ட்டர் வெடிமருந்துகள் முக்கிய இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப் பயன்படுத்தப்படும். அதே சமயம் குறைந்த உயர இலகுரக ரேடார்கள், சிறிய அளவிலான, குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களைக் கண்டறிந்து அதனைக் கண்காணிக்கும். நீண்ட தூரம் சென்று இலக்குகளைத் தாக்கும் ராக்கெட்டுகள், அதிக தொலைவில் உள்ள இலக்குகளை திறம்படத் தாக்குவதற்கான பினாகா ரக ராக்கெட் அதன் துல்லியத்தையும் மேம்படுத்தும். மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிந்து அழிக்கும் அமைப்பு, உத்திசார் போர் பகுதி மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவத்தின் முக்கிய சொத்துக்களைப் பாதுகாக்கும்.
