சென்னையில் தவெக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதற்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்தநிலையில் நேற்று மதுரையில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.
கடந்த 12ஆம் தேதி ஆதவ் அர்ஜூனா, ரஜினி குறித்து பேசிய நிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று (மார்ச் 16) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர், தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ரஜினி காந்த். மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், பிரதமர் மோடியுடைய மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர். ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர்.
அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல! அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்!
பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ரசிகர்களிடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
