என் முதல் காதல்… திருமண வதந்திகளுக்கு மத்தியில் அனுஷ்கா ஓபன் டாக்!

Published On:

| By christopher

anushka shetty shares her first love story

திருமண வதந்திகளுக்கு மத்தியில் தன்னுடைய முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அனுஷ்கா. anushka shetty shares her first love story

தமிழ் திரையுலகில் மாதவனுடன் ‘ரெண்டு’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் அனுஷ்கா ஷெட்டி. அதன்பின்னர் அருந்ததீ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர், ரஜினி சூர்யா, விஜய், அஜித், சிம்பு ஆகியோருடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸுடன் அவர் இணைந்து நடித்த பாகுபலி உலகளவில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

கடைசியாக அவர் நடித்த இஞ்சி இடுப்பழகி, நிசப்தம், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக தடுமாறின. தமிழ் சினிமாவில் அவர் நடிப்பில் படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

இதற்கிடையே அனுஷ்காவின் திருமணம் குறித்த வதந்திகள் ஊடகங்ளில் அவ்வபோது கொடிக்கட்டி பறக்கின்றன. நடிகர் பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ’நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும்தான்’ எனக் கூறி அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

43 வயதான அனுஷ்கா, இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் உள்ள நிலையில், தனது முதல் காதல் குறித்து ஊடகத்தில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர், “நான் 6ம் வகுப்பு படிக்கும்போது, என் வகுப்பில் இருந்து ஒரு பையன் என்னிடம் வந்து, ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என கூறினான். அவன் என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாக சொன்னான். அந்த நேரத்தில் ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்றால் என்ன அர்த்தம் என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால், ‘சரி’ என அந்த காதலை ஏற்றுக்கொண்டேன். காதல் என்னவென்றே புரியாத வயதில் நடந்த அது, என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவாகவே இன்றும் உள்ளது” என அனுஷ்கா தெரிவித்தார்.

தற்போது விக்ரம் பிரபு உடன் இணைந்து ’காட்டி’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை (ஜூலை 11) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனினும் படத்தின் ரிலீஸை ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். புதிய வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.

ஜெயசூர்யா நடிக்கும் கத்தனார் – தி வைல்ட் சோர்சரர் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாக உள்ளார். மேலும் கார்த்தியுடன் கைதி 2 படத்திலும் அனுஷ்கா நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் டில்லியின் மனைவியாக நடிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share