ADVERTISEMENT

வெனிஸ் பட விழாவில் விருது – பெண் இயக்குனரின் சாதனை!

Published On:

| By uthay Padagalingam

சமீபத்தில் நடந்து முடிந்த 82ஆவது வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்று சாதனை படைத்திருக்கிறார் இயக்குனர் அனுபர்ணா ராய். ‘சாங்ஸ் ஆஃப் பர்ஹாட்டன் ட்ரீஸ்’ (songs for forgotten trees) படத்திற்காக அவர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.

பிழைப்புக்காக வேறிடத்தில் இருந்து மும்பைக்கு வேலை தேடி வந்த இரண்டு பெண்களின் வாழ்வனுபவங்களைப் பேசுவதாக உள்ளது இப்படத்தின் கதை. அதிலொருவர் சினிமா நடிகை; இன்னொருவர் கார்பரேட் நிறுவனமொன்றில் பணியாற்றுபவர். எதிர்பாராத நிகழ்வுகளால் ஒரு வீட்டில் சேர்ந்து வசிக்கும் இவர்களிடையே நல்லுறவு பூப்பதைச் சொல்கிறது இப்படம்.

ADVERTISEMENT

சுமார் 80 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த இந்திப்படம் இயக்குனர் அனுபர்ணா ராயின் முதல் படைப்பு. இதற்கு முன் ‘ரன் டூ தி ரிவர்’ எனும் குறும்படத்தை இவர் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் நிஷாந்த் ராம்தேக் தொடங்கி நடிகர் நடிகையர் வரை பலரும் புதுமுகங்களே.

ADVERTISEMENT

அதனால் அனுபர்ணா படைத்துள்ள சாதனை இந்தியத் திரையுலகையே ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு அமைந்துள்ளது.

இந்த விருதினைப் பெற்றவுடன் போட்டி நடுவர்கள் முதல் படக்குழுவினர், தயாரிப்பாளர், படத்தை வழங்கிய இயக்குனர் அனுராக் காஷ்யப் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அனுபர்ணா.

ADVERTISEMENT

அந்த மேடையில் பேசுகையில், ‘பாலஸ்தீனத்தில் இருக்கிற ஒவ்வொரு குழந்தையும் அமைதியும் சுதந்திரமும் பெற வேண்டும்’ என்று தான் விரும்புவதாகக் கூறியுள்ளார்.

நாடு திரும்பியவுடன், இதையே மையப்படுத்தி அனுபர்ணாவிடம் கேள்விகள் கேட்டுத் துளைக்கும் நம்மூர் ஊடகங்கள். ‘பிலிம் மேக்கிங் ஒரு டிபார்ட்மெண்ட். ஒப்பீனியன் வேற டிபார்ட்மெண்ட்’ என அப்போது பதில் சொல்ல முடியுமா?!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share