ரோஜாப் பூ கொடுத்து, டெடி பியர் வாங்கித் தந்து, “நீதான் என் உலகம்” என்று உருகிய அந்தக் காதல் வாரம் (Valentine’s Week) ஒருவழியாய் முடிந்துவிட்டது. “அப்பாடா! எப்படா இந்த ஃபீலிங்ஸ் திருவிழா முடியும்?” என்று காத்திருந்த முரட்டு சிங்கில்ஸ்களுக்கும், காதலில் காயப்பட்டவர்களுக்கும் (Heartbroken) இப்போதுதான் கொண்டாட்டமே ஆரம்பமாகிறது.
ஆம், பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 21 வரை உலகம் முழுவதும் “ஆன்ட்டி வேலண்டைன்ஸ் வீக்” (Anti Valentines Week) கடைபிடிக்கப்படுகிறது. காதலைக் கொண்டாடுபவர்களுக்கு ஒரு வாரம் என்றால், காதலை வெறுப்பவர்களுக்கும், அதிலிருந்து மீண்டு வரத் துடிப்பவர்களுக்கும் ஒரு வாரம் வேண்டாமா?
நேற்று (பிப்ரவரி 15) ‘ஸ்லாப் டே‘ (Slap Day) உடன் தொடங்கிய இந்த வாரம், சமூக வலைதளங்களில் மீம்ஸ் மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறது. இந்த வாரத்தின் சுவாரஸ்யமான நாட்கள் என்னென்ன? ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம்? என்று பார்ப்போம்.
1. ஸ்லாப் டே (Slap Day) – பிப்ரவரி 15: “கன்னத்தில் அறைவது” என்பது இதன் நேரடி அர்த்தம் அல்ல. நம் வாழ்க்கையில் நமக்குத் தேவையில்லாத, நம் நிம்மதியைக் கெடுக்கும் பழைய நினைவுகளையும், உறவுகளையும் (Toxic Relationships) தூக்கி எறிந்துவிட்டு, நம் சுயமரியாதையைத் தட்டி எழுப்பும் நாள்தான் இது. நேற்றைய தினம் எக்ஸ் (X) தளத்தில் #SlapDay டிரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2. கிக் டே (Kick Day) – பிப்ரவரி 16 (இன்று): இன்று ‘கிக் டே‘. கால்பந்தை உதைப்பது போல, உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தைத் தடுக்கும் கவலைகள், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உங்களுக்குத் துரோகம் செய்தவர்களின் நினைவுகளை எட்டி உதைத்துத் தள்ளும் நாள் இது. “பழைய குப்பைகளை வெளியேற்றினால்தான், புதிய சந்தோஷங்களுக்கு இடம் கிடைக்கும்,” என்பதே இந்நாளின் தத்துவம்.
3. பெர்ஃப்யூம் டே (Perfume Day) – பிப்ரவரி 17: நாளை வாசனை திரவியங்களுக்கான நாள். காதலர்தான் நமக்கு ரோஜா கொடுக்க வேண்டும் என்பதில்லை; நமக்கு நாமே நல்ல நறுமணம் வீசும் பெர்ஃப்யூமை பரிசளித்துக் கொண்டு, “நானே ராஜா, நானே மந்திரி” என்று கெத்தாக வலம் வரலாம். இது சுய அன்பின் (Self-love) வெளிப்பாடு.
4. ஃப்ளர்ட்டிங் டே (Flirting Day) – பிப்ரவரி 18: காதல் தோல்வியிலேயே மூழ்கி இருக்காமல், புதிய மனிதர்களிடம் கலகலப்பாகப் பேசவும், ஜாலியாகப் பழகவும் (Healthy Flirting) ஒரு வாய்ப்பு. இது சீரியஸான உறவுக்கானது அல்ல; மனதை லேசாக்கிக் கொள்ளும் ஒரு ஜாலி விளையாட்டு.
5. கன்ஃபெஷன் டே (Confession Day) – பிப்ரவரி 19: மனதிற்குள் இருக்கும் பாரங்களை இறக்கி வைக்கும் நாள். யாரிடமாவது மன்னிப்பு கேட்க வேண்டுமா? அல்லது “உன்னைப் பிடிக்கவில்லை” என்று உண்மையைச் சொல்ல வேண்டுமா? இன்று சொல்லிவிடுங்கள். மனதில் ஒளிவுமறைவு இல்லாமல் இருப்பதே நிம்மதி.
6. மிஸ்ஸிங் டே (Missing Day) – பிப்ரவரி 20: இது கொஞ்சம் எமோஷனலான நாள். பிரிந்து சென்ற காதலனையோ அல்லது நம்மை விட்டுச் சென்ற அன்பானவர்களையோ நினைத்து, “உங்களை மிஸ் செய்கிறேன்” என்று உணர்வுகளை வெளிப்படுத்தும் நாள். அழுது தீர்த்துவிட்டு, அடுத்த கட்டத்திற்கு நகர இது உதவும்.
7. பிரேக்-அப் டே (Breakup Day) – பிப்ரவரி 21: வாரத்தின் கடைசி நாள். ஒட்டுமொத்தமாக ஒத்து வராத உறவுக்கு ஒரு முழுக்கு (Full Stop) வைக்கும் நாள். சுதந்திரப் பறவையாகச் சிறகடிக்கத் தொடங்கும் நாள்.
இது வெறுப்புக்கான வாரம் அல்ல! இந்த ஆன்ட்டி வேலண்டைன்ஸ் வாரம் என்பது காதலை வெறுப்பதற்கானது அல்ல. இது நம்மை நாமே நேசிக்கவும், தவறான உறவுகளிலிருந்து விடுபட்டு மன அமைதியைத் தேடவும் ஒரு வாய்ப்பு.
எனவே, “சிங்கில் பாவம்” என்று யாராவது சொன்னால், “நாங்க வேற ரகம்!” என்று இந்த வாரத்தைக் கொண்டாடுங்கள்!
Keywords: Anti-Valentine’s Week 2026, Slap Day Meaning, Kick Day 2026, Breakup Day List, Singles Celebration, Valentine’s Week Memes, Tamil Lifestyle News
