இந்தி திணிப்பு எதிர்ப்பு பேராட்டம் : “இனி ஒரு உயிரும் போகக் கூடாது” – சிவா திலீபன் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது ரயில் முன் பாய்ந்து படுகாயமடைந்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இனி ஒரு உயிரும் போக வேண்டாம்” என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மார்ச் 11-ஆம் தேதி சென்னை பார்க் ரயில் நிலையத்தில், மே 17 இயக்கம் சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அப்போது சிவா திலீபன், “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என முழக்கமிட்டபடி ரயில் முன் பாய்ந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் உயிரிழந்த சிவா திலீபன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “இனி ஒரு உயிரும் போக வேண்டாம்!

இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் சிவா திலீபன் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.

ADVERTISEMENT

மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!

இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் – தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share