கவின் சாதி ஆணவ கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் ஜெயபால் எனபவரை போலீசார் இன்று (ஆகஸ்ட் 13) கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ். பட்டியலின சமூக இளைஞரான இவர் ஐடி ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 27ம் தேதி நெல்லை கேடிசி நகரில் அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பின்னர் சரணடைந்த சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் சுர்ஜித்தின் பெற்றோர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் உதவி ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ண குமாரி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சுர்ஜித்தின் தந்தை சரவணனை போலீஸார் கைது செய்தனர்.
தற்போது கவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த 11ஆம் தேதி கைதான இருவரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு திருநெல்வேலி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி பாளையங்கோட்டை பெருமாள்புரத்திலுள்ள சிபிசிஐடி காவல் அலுவலகத்தில் வைத்து சுர்ஜித் மற்றும் சரவணன் இருவரிடமும் டிஎஸ்பி ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையிலான போலீஸார் தனித் தனியாக விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் இருந்து வந்த சிபிசிஐடி எஸ்.பி. ஜவகர் தலைமையில் இருவரிடமும் விசாரணை நடைபெற்றது.
அதன் அடிப்படையில் சுர்ஜித்தின் சித்தி பையன் ஜெயபாலனை கைது செய்த போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே 2 நாள் காவல் முடிந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளாதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.