ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வந்த நிலையில் கோவை அன்னபூர்ணா கடையில் கிரீம் பன் விலை ரூ.27க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா உணவக நிர்வாக இயக்குநர் சீனிவாசன், “பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி என இருக்கிறது. இதனால் கஸ்டமர்கள் நீங்க க்ரீமையும் பன்னையும் தனியாகக் கொடுங்கள்.. நாங்கள் சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்கின்றனர். வரியைக் குறைத்தால் அனைத்திற்கும் குறையுங்கள்.. இல்லை என்றால் அனைத்திற்கும் உயர்த்துங்கள்” எனக் கோரிக்கை வைத்திருந்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல தரப்பினரும் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டனர். இதையடுத்து மறுநாள் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோவை பாஜகவினர் வெளியிட்ட நிலையில், அதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து நான்கு விகித ஜிஎஸ்டி முறையை மாற்றி இரண்டு விகித ஜிஎஸ்டி திங்கள் கிழமை அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 375 பொருட்கள் மீதான வரி குறைப்பால் பிஸ்கெட், பேக்கரி பொருட்கள் முதல் கார்கள் வரை பல பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சையான கிரீம் பன் விலை நிலவரம்
ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை அன்னபூர்ணாவில் கீரிம் பன் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 27 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
முந்திரி பகோடா கிலோவுக்கு 47 குறைவு விலை குறைந்து கிலோ 703 ரூபாய்க்கும், ராகி பகோடா 41 ரூபாய் குறைந்து கிலோ 659 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
உணவு பொருட்கள் வழக்கம் போல 5 சதவீத ஜி.எஸ்.டியுடன் விற்கப்படுவதாகவும், தண்ணீர் பாட்டில் 20 ரூபாயில் இருந்து 18 ரூபாயாக விலை குறைத்து இன்று காலை முதல் விற்கப்படுவதாகவும் உணவக ஊழியர்கள் தெரிவித்தனர்.