பாஜகவில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பி, சமூக வலைதளங்களில் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
கடந்த மார்ச் 29ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி கேரளா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவை வழியாகச் சென்றார். கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜக பிரமுகர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பிரதமரை வரவேற்றனர். ஆனால், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் இருந்தும் பிரதமரை வரவேற்கச் செல்லாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
வானதி தகவல்
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “வரவேற்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இருந்தது. ஆனால் அவர்தான் வரவில்லை” என்று தெரிவித்தார். ஆனால் பிரதமரை வரவேற்கும் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம் பெறவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த அண்ணாமலை ஆதரவாளர்கள் அவர் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இது குறித்து பாஜக ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அண்ணாமலையார் பாஜகவிலேயே தொடர வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு சில கேள்விகள்…
தேர்தலுக்குப் பிறகும் அண்ணாமலையாருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்காமல் தற்பொழுது போல் காக்க வைக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?
தேர்தலுக்குப் பிறகு நீங்கள் விரும்புவது போல் ராஜ்யசபா உறுப்பினரோ அல்லது மத்திய அமைச்சர் பதவியையோ கொடுக்காமல் காக்க வைக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? தேர்தல் முடிந்த பிறகும் தற்போது உள்ள தலைவர் மாற்றப்படாமல் தொடர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஒருவேளை 2027-இல் தலைமை மாற்றம் காலம் வரும் பொழுது மீண்டும் தற்போதைய தலைவருக்கு இன்னொரு முறை பொறுப்பு வழங்கினாலோ அல்லது அண்ணாமலையாரை புறக்கணித்துவிட்டு மீண்டும் அதே so called மூத்த தலைவர்களில் ஒருவருக்கு தலைமை பொறுப்பை வழங்கினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இந்த இடைப்பட்ட காலத்தில் தற்போது போல் அண்ணாமலையார் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பாஜக அரசியலை பல வருஷமாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபராக சொல்கிறேன் நான் மேலே சொன்னது அனைத்தும் நடக்கும்.” எனக் கூறப்பட்டுள்ளது.
நயினார் விளக்கம்
இந்நிலையில், இன்று இந்தச் சர்ச்சை குறித்து பாஜக மாநிலத் தலைவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் “பிரதமர் வரவேற்பு தொடர்பாக அண்ணாமலையுடன் தொலைபேசியில் பேசினேன். அண்ணாமலை ஊரில் இல்லாததால் வரவேற்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை” என்று விளக்கம் அளித்தார். வானதி சீனிவாசன் அண்ணாமலையின் பெயர் பட்டியலில் இருந்தது என தெரிவித்திருந்த நிலையில் நயினார் பட்டியலில் அண்ணாமலை பெயர் சேர்க்கப்படவில்லை என முன்னுக்கு பின் முரணாக தெரிவித்திருப்பது அண்ணாமலை ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அண்ணாமலையை திட்டமிட்டு ஓரங்கட்டவே கோவையில் பாஜகவிற்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனால் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தலைமையிடம் கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு பாஜகவுக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தொகுதி பங்கீடு அதிருப்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
