“நான் தனி மனிதன்; யாருடைய கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை.. யார்கிட்டயும் வேலை செய்யலை.. பேசும்போது பேசுவேன்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Annamalai BJP
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது அதிமுக. ஆனால் “தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் அமையும்; கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது.. இது என்னுடைய தனிப்படை கருத்து” என கூறியிருந்தார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. இதனை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதனிடையே அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, “அதிமுகவில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்; பாஜக இடம் பெறும் கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தில் அமையும்” என்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை அமித்ஷா குறிப்பிடவில்லை; பாஜகவும் இடம் பெறும் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் அழுத்தம் திருத்தமாக அமித்ஷா கூறியிருந்தார். இதுவும் அதிமுக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதற்கு பதில் தரும் வகையில் சென்னையில் ஜூலை 4-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து அறிவித்த அமித்ஷா, அப்போதே நான் (எடப்பாடி பழனிசாமி) முதல்வர் வேட்பாளர் என அறிவித்துவிட்டார்; இது தொடர்பாக யார் என்ன பேசினாலும் சரியல்ல என கூறியிருந்தார். அதேநேரத்தில் ‘கூட்டணி ஆட்சி’ பற்றி எந்த கருத்தையும் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவில்லை.
இந்த பின்னணியில் ஜூலை 6-ந் தேதி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “அண்ணா… நான் பேசவிரும்பலீங்க அண்ணா.. அண்ணே.. நான் பேசும்போது பேசறேன்.. நான் யார்கிட்டயும் வேலை பார்க்கலை.. நான் தனி மனிதன்.. பேசும்போது பேசறேன்.. மற்றவங்க கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லைங்க அண்ணா.. நான் இன்னைக்கு தனி மனிதனா இருக்கேன்.. மற்றவங்க கருத்துக்கு பதில் சொல வேண்டிய அவசியம் இல்லைங்க அண்ணா.. நான் பேசும்போது பேசறேன்” என அண்ணாமலை பதிலளித்தார். அண்ணாமலையின் இந்த பேட்டி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.