கேசவ விநாயகம் அரசியல்வாதி கிடையாது. நயினார் நாகேந்திரனுடன் பனிப்போர்.. கோல்டு வார்.. என எதுவும் கிடையாது என தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கேசவ விநாயகம்,தமிழ்நாடு முழுவதும் சம்பர்க் (சமுதாய நல்லெண்ணம்) என்ற பொறுப்பில் செயல்படுவார். அத்துடன் வட தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினராக செயல்படுவார் என ஆர்எஸ்எஸ் இயக்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருப்பூரில் இன்று தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் நீண்ட காலமாக சிறப்பாகப் பணியாற்றியவர் நமது அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம். நிறைய தேர்தல்களைச் சந்தித்தவர். நல்ல மனிதர். கடுமையாக உழைக்கக்கூடியவர். மிகவும் எளிமையாக வாழக்கூடியவர். அவர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்-கில் இருந்தவர். அவருக்கு எந்தப் பொறுப்பும் ஒரே பொறுப்புதான். அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு கொடுக்கப்பட்டார். தற்போது அவரை மீண்டும் அழைத்த சங்கம் வேறொரு பொறுப்பை வழங்கியுள்ளது. இன்று இங்கிருந்து ஒரு முக்கியமான பொறுப்பிற்குச் சென்றுள்ளார். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அமைப்புப் பொதுச்செயலாளர்கள் இல்லை. இது ஒன்றும் புதிதல்ல.
இந்த ஆண்டும் கூட சங்கத்திற்கும் திறமையானவர்கள் தேவைப்படுகின்றனர். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் நிறைய வேலைகள் உள்ளன. இன்று காலை கமலாலயத்தில் கேசவ விநாயகத்தைச் சந்தித்து, மிகச் சிறப்பாகப் பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்தோம். அவரைப் பொறுத்தவரை அவர் பிரச்சாரக். அவர் தனது வேலையை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார். அவர் அரசியல்வாதி கிடையாது. அதனால் மீண்டும் அவரைப் பற்றி தேவையில்லாத விவாதங்களும், சர்ச்சைகளும் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்றார்.
அப்போது செய்தியாளர்கள் கருத்து வேறுபாடு குறித்து கேள்வி எழுப்பியபோது, அண்ணாமலை, “அமெரிக்காவிடம் போய் ஒப்பந்தம் செய்கிறோமா? இதில் கருத்து வேறுபாடு எங்கு வருகிறது? அவர் தனது வேலையைச் செய்கிறார். நான் எனது வேலையைச் செய்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்து பேசுகையில், “நயினார் நகேந்திரனுடன் பனிப்போர்.. கோல்ட் வார்.. ஹாட் வார் என்று எதுவும் கிடையாது. கட்சி கொடுக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன்” என தெரிவித்தார்.
