பாஜகவின் “பூத் கமிட்டி மாநாடு” (Booth Agents) நெல்லையில் ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெறும் நிலையில் பூத் முகவர்களில் 50% பேர் ‘போலிகள்’ என தெரிய வந்ததால் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் அப்செட்டாகி இருக்கிறாராம்.

அனைத்து அரசியல் கட்சிகளைப் போல பாஜகவும் தேர்தல் பணிகளில் ஜரூராக களமிறங்கிவிட்டது. பாஜகவின் ‘பூத்களை வலிமைப்படுத்துவோம்’ என்ற முழக்கத்தின் ஒரு பகுதியாகவே திருநெல்வேலியில் ஆகஸ்ட் 17-ந் தேதி பிரம்மாண்டமான மாநாடு நடைபெற இருக்கிறது.
கன்னியாகுமரி, தென்காசி,விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பூத் முகவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த பூத் முகவர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக இந்த 5 மாவட்டங்களில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அதில் பங்கேற்று வருகிறார் நயினார் நாகேந்திரன்.
30 சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவின் அதிகாரப்பூர்வமான பூத் முகவர்கள் எண்ணிக்கை 1,02, 735 . இத்தனை பேரையும் திரட்டி மாநாடு நடத்தினால் பிரம்மாண்டமாக இருக்கும் என்றுதான் நயினார் நாகேந்திரன் கணக்குப் போட்டார்.

அதேநேரத்தில் ஒரு சந்தேகத்தின் பேரில், இந்த பூத் முகவர்களில் இன்னமும் ஆக்டிவ்வாக எத்தனை பேர் இருக்கின்றனர் என செக் செய்ய சொல்லி இருக்கிறார் நயினார்.
இந்த பூத் ஏஜெண்ட் செக்கிங் பெரும் பூதாகரமாகிவிட்டதாம்..
பாஜகவின் கணக்கில் உள்ள சுமார் 1 லட்சம் பூத் முகவர்களில் 50% பேர் போலிகளாம். லிஸ்ஸ்ட்டில் உள்ள பூத் முகவர்களை தொடர்பு கொண்டால், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது.. நான்தான் கட்சியிலேயே இல்லையே.. அரசியலைவிட்டே போய்விட்டேன் என்கிற குரல்கள்தான் அதிகமாக கேட்கிறதாம்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை ‘ஆட்சி செய்த காலத்தில்’தான் இந்த ‘கள்ள ஆட்டம்’ நடந்ததாம். இதுதான் நயினார் நாகேந்திரனை ரொம்பவே கடுப்பாக்கிவிட்டிருக்கிறது என்கின்றன நயினார் வட்டாரங்கள்.

இதற்காக என்ன செய்ய முடியும்? என சளைக்காமல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக போய் ‘ஒரிஜனல்’ பாஜக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டங்களில் இடைவிடாமல் பங்கேற்று வருகிறார் நயினார்.
அத்துடன், தமது சொந்த மண்ணான நெல்லை சீமையில் நடக்கும் பிரம்மாண்டமான பூத் முகவர்கள் மாநாட்டில் டெல்லியில் இருந்து ஜேபி நட்டா, அமித்ஷா அல்லது நிர்மலா சீதாராமன் ஆகிய மூவரில் ஒருவர் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டு வருகிறாராம் நயினார் நாகேந்திரன்.
இதேபோல கோவை, திருச்சி, திண்டிவனம், சென்னையிலும் அடுத்தடுத்த பூத் முகவர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள நயினார் நாகேந்திரனுக்கு, போலி பூத் ஏஜெண்டுகள் விவகாரம்தான் பெரும் தலைவலியாகிவிட்டது.. பிற மாவட்டங்களில் இன்னும் எத்தனை போலி பூத் ஏஜெண்டுகளோ? என்கிற கவலையில் இருக்கிறார் நயினார் என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.
