2 தொகுதிகளை குறி வைக்கும் அண்ணாமலை.. கோவையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

Published On:

| By Pandeeswari Gurusamy

annamalai

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அல்லது திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த ஊரான கரூரில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அண்ணாமலை, அதன்பிறகு கோவையை மையமாக வைத்து அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ADVERTISEMENT

தற்போது அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் நடைபெறும் தெருமுனை கூட்டங்களில் அதிமுகவினருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கோவை விளாங்குறிச்சியில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திரண்டிருந்த இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து ஆதரவாளர்களிடம் தனித்தனியாக கலந்தாலோசித்தார்.

குறிப்பாக சிங்காநல்லூர் அல்லது பல்லடம் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், எந்தத் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பது குறித்து ஆதரவாளர்களிடம் அண்ணாமலை தனித்தனியாக கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

சிங்காநல்லூர் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், அங்குள்ள சாதக-பாதக அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share