பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்துள்ள நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவசாயிகள் பிரதமருக்கு மாட்டு வண்டியை பரிசளித்தனர்.
பிரதமர் மோடி இன்று (நவம்பர் 19) இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கி வைக்க கோவை வந்துள்ளார். அவருக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக அரசு சார்பில் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமாகா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பிரதமர் மோடியை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எலுமிச்சை கொடுத்து வரவேற்றார். அப்போது மோடி அண்ணாமலையிடம் கை ஓங்கிய படி பேசிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அண்ணாமலை அருகில் இருந்த புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் மலராத தாமரை மொட்டை அளித்து வரவேற்றார்.
மாநாட்டை தொடங்கி வைத்த பிரமருக்கு விவசாயிகள் மாட்டு வண்டியை வழங்கினர். மேலும் பிரதமருடன் விவசாயிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
விழாவில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 21 ஆவது தவணை நிதியை மோடி விடுவித்தார். இதன் மூலம் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18000 கோடி உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் வணக்கம் என கூறி தனது உரையை துவக்கினார். அப்போது பாண்டியன் மிக அருமையாக உரையாற்றினார். ஆனால் அவரது உரையை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. நானும் சிறுவயதில் தமிழ் படித்திருக்கலாமோ என்று தோன்றியது. ஆளுநர் ரவி அவர்களிடம் பாண்டியன் அவர்களின் உரையை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தரும் படி கேட்டுள்ளேன் என்றார்.
