பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 31) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளிப்பதைத் தவிர்த்துவிட்டு சென்றுள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடும் நோக்கில் செயல்பட்டு வந்தார். ஆனால் இந்த முறை அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் கோவை வடக்கு தொகுதி மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அண்ணாமலை கோவையில் பாஜகவுக்கு குறைந்தது 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தனது அதிருப்தியை பாஜக தலைமையிடம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று புதுச்சேரி செல்வதற்காக இன்று கோவை விமான நிலையம் வந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்றார்.முன்னதாக அண்ணாமலை பாஜக கட்சிக் கொடி இல்லாத காரில் விமான நிலையத்துக்கு வந்தார்.அவரிடம் “பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்கிறீர்களா? அரசியல் களம் எவ்வாறு உள்ளது? கோவையில் செந்தில் பாலாஜி போட்டியிடுவது குறித்து” எனப் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதைத் தவிர்த்துவிட்டு அங்கிருந்து நழுவினார்
அதேசமயம் அண்ணாமலை கட்சி கொடி கட்டாத காரில் வந்ததும் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பாஜகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான அண்ணாமலை இதுவரை காரில் கட்சி கொடி கட்ட அனுமதி பெறவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
