ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: இபிஎஸ் கனவில் அணுகுண்டு வீசும் அண்ணாமலை- சசிகலாவுடன் விஜய் அப்பா SAC ‘புது கணக்கு’- ஓபிஎஸ், தினகரன் கதி என்ன?

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும், “வங்க கடலில் புயல் வருவதற்குள் சட்டமன்ற தேர்தல் புயல் வலுவாகிறதே” என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

ஆமாய்யா.. ஒவ்வொரு நாளும் புயல்தான்.. ஒவ்வொரு புயலா சொல்லுமய்யா..

ADVERTISEMENT

டிடிவி தினகரனில் இருந்து தொடங்குவோம்.. அதிமுக- பாஜக கூட்டணியில் நீடிப்பதாகவே சொல்லி வந்த தினகரன், திடீரென செப்டம்பர் 3-ந் தேதி இரவு, அந்த கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.

டிடிவி தினகரனை வெறுப்பேற்றும் வகையில் ஜிகே மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் அவரை வரவிடாமல் தடுத்தது உள்ளிட்ட இபிஎஸ் செய்த ‘சம்பவங்களை’ நாம் ஏற்கனவே சொல்லி இருந்தோம்.. அதே மாதிரி 2 நாட்களுக்கு முன்னாடி மதுரையில், ஓபிஎஸ்ஸை தினகரன் சந்தித்து நீண்ட நேரம் பேசுனாரு.. அதுக்கு பின்னர்தான் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கு.

ADVERTISEMENT

டிடிவி தினகரன் முடிவால் பாஜக ரியாக்சன் என்னவாம்?

பாஜகவுக்கு அதிர்ச்சிதான்.. அதில் சந்தேகம் இல்லை.. அத்துடன் பாஜக- அதிமுக தொண்டர்கள் ரொம்பவே சோர்ந்து போயிட்டாங்களாம்.. ஏற்கனவே பாஜக- அதிமுக கூட்டணியில் பலமான கட்சி வரும்.. பிரம்மாண்டமான கட்சி வரும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.. ஆனால் பாஜக- அதிமுக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், இவங்களோடு செங்கோட்டையன் என ஒவ்வொரு நாளும் கெட்ட சேதியாக வருவதால்தான், “என்னய்யா இப்படி நடக்குது.. என்னதான் ஆகப் போகுதோ” என புலம்பியபடி உற்சாகத்தை பறிகொடுத்து நிற்கின்றனராம் தொண்டர்கள். எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால்தான் இத்தனையும் நடக்குதுன்னு ரொம்ப வருத்தமா இருக்காங்களாம் அதிமுக- பாஜக தொண்டர்கள்.

ADVERTISEMENT

சரி.. டிடிவி தினகரன் எந்த கூட்டணிக்கு போகப் போகிறாராம்?

தினகரனைப் பொறுத்தவரையில் ஒரே சாய்ஸ் விஜய் தவெகவுடனான கூட்டணிதான். டிடிவிக்கு மட்டுமல்ல ஓபிஎஸ்-க்கும் விஜய் கூட்டணிதான் சாய்ஸ்.

ஓஹோ.. விஜய், கூட்டணிக்கான ‘கேட்டை’ திறந்துவிட்டாரா?

அதை ஏன் கேட்கிறப்பா.. தலையே சுத்துறமாதிரி சேதிகள் விஜய் கட்சியில் இருக்கு.

அப்படியா ஒவ்வொரு சேதியாக சொல்லிடுமய்யா..

‘முதல்வர் வேட்பாளராக’ விஜய்யை ஏற்றுக் கொண்டு வரும் கட்சிகளுக்கு ஆட்சி
‘அதிகாரத்தில் பங்கு’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தும் பெரிதாக எந்த கட்சியும் விஜய் கூட்டணிக்கு ஆர்வம் காட்டவில்லை. இப்ப நிலவரத்துக்கு ஓபிஎஸ், தினகரன் இருவரும் விஜய் கூட்டணிக்கான சாத்தியம் உள்ளவங்க..

ஓபிஎஸ் தரப்பில் அவரது மகன் ரவீந்திரநாத் ஏற்கனவே ஜான் ஆரோக்கியசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.. ஆனாலும் விஜய்கிட்ட இருந்து சிக்னல் வரலை.. ஜனவரி மாதம் வரை வெயிட் பண்ண சொல்லிட்டார் விஜய்.

இன்னொரு பக்கம், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா.. எல்லோரும் ஒருங்கிணைந்து வந்தா கூட்டணி நல்லா இருக்கும்னு நினைச்சு ஆதவ் அர்ஜூனா ஒரு முயற்சி செய்யுறாரு..

ஆதவ் அர்ஜூனா- ஓபிஎஸ், டிடிவி தினகரன் மட்டுமல்லாமல் பாமக அன்புமணி, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமின்னு பலரிடமும் பேசிகிட்டே இருக்கிறார்.

அதே மாதிரி, விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய் அனுமதி இல்லாமலேயே 2 முறை சசிகலாவை சந்தித்து பேசியிருக்கிறார். எஸ்.ஏ.சி.யைப் பொறுத்தவரைக்கும், சசிகலாவிடம் இன்னும் சில ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருக்கு.. அதை எல்லாம் சசி வெளியே எடுக்காமல் இருக்கிறார்.. சசிகலாவுடன் கூட்டணி வைத்தால் தேர்தல் பட்ஜெட்டுக்கு கை கொடுக்குமே என்கிற கால்குலேஷனுடன் இந்த சந்திப்புகளில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறாராம் எஸ்.ஏ.சி.

எல்லாம் செம்மையாதான் இருக்கு.. விஜய் என்னதான் முடிவில் இருக்கிறாராம்?

அங்கதான் பாயிண்ட்டே இருக்கு. நெல்லையில் கவின் படுகொலை நடந்தப்ப, அவங்க வீட்டுக்கு விஜய் போகனும் அப்படின்னு ஆதவ் அர்ஜூனா ரொம்ப மெனக்கெட்டு பார்த்தாரு.. ஆனால் அப்போ, ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய் அப்படி கவின் வீட்டுக்கு போனா மற்ற சமூகங்கள் நம்ம மீது அதிருப்தியாகிவிடுவாங்க.. அதனால போக வேண்டாம்னு தடுத்திருந்தாருன்னு நாம சொல்லி இருந்தோம்.

ஆமாம்.. இதில் புது அப்டேட் என்னவாம்?

அவசரப்படாதய்யா.. விஜய்யைப் பொறுத்தவரைக்கும், ஓபிஎஸ்- டிடிவி தினகரன் எல்லாம் நம்ம கூட்டணிக்கு வருவதால நமக்கு லாபமா? அவங்களுக்குதான் லாபமா? என்கிற கேள்வியை ஜான்கிட்ட கேட்டிருக்கிறார்..

அப்ப ஜான் ஒரு கணக்கு சொல்லி இருக்கிறார்… அதாவது, “ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு தனித்த வாக்குகள் பெரிதாக இல்லை.. முக்குலத்தோர் ஜாதியை முன்வைத்து நிற்கிறாங்க.. ஒருவேளை ஓபிஎஸ், டிடிவி தினகரனை நாம கூட்டணியில் சேர்த்தால் மற்ற ஜாதிக்காரங்க ஏத்துக்குவாங்களா?ன்னு ஒரு கேள்வி வரும்..

அதுமட்டுமல்ல.. நமக்கு ஓட்டு வங்கியாக இருக்கிறதுன்னு நாம நம்புறதே ஒடுக்கப்பட்ட மக்கள் வாக்குகளைத்தான்.. ஓபிஎஸ், டிடிவியை உள்ளே அழைச்சா இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் நம்மகிட்ட இருந்து விலகிடுவாங்களே” என விலாவாரியாக விஜ்ஜயிடம் சொன்னாராம் ஜான்.

இதனால இப்ப வரைக்கும் கூட்டணி தொடர்பான ‘ஆதவ் அர்ஜூனாவின் ஆபரேஷனுக்கு’ விஜய் தடைதான் போட்டு இருக்கிறாராம்..

ரொம்பவே யோசிக்கிறாங்கப்பா..

ஆமாம்.. ரொம்பவே யோசித்துதான் செங்கோட்டையனும் இப்ப மவுனம் கலைக்கிறார்யா..

அதுசரி.. செங்கோட்டையன் என்ன திடீரெனு கிளம்பிட்டாரு?

அதிமுகவில் சீனியர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருக்கிறதால கொங்கு பெல்ட் சீனியர்களான வேலுமணி, தங்கமணி அவரிடம் பேச ரொம்ப முயற்சி செஞ்சாங்க.. ஆனால் இவங்க ரெண்டு பேருடைய போனையும் ‘செங்ஸ்’ அட்டெண்ட் பண்ணவே இல்லையாம்..

அப்ப என்ன திமுகவுக்கு தாவப் போறாரா?

அதிமுகவில் இருந்து சீனியர் ஒருவர் திமுகவுக்கு வந்தால் பொதுவாக ஏற்பாங்கதான்.. ஆனால் செங்கோட்டையன் விவகாரம் அப்படி இல்லை. இது பற்றி நாம் திமுக வட்டாரங்களில் பேசிய போது, “ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவில் இருந்து வந்த முத்துசாமி அமைச்சராக இருக்கிறார். அதேபோல பக்கத்து மாவட்டமான கரூரில் அதிமுகவில் இருந்து வந்த செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தார்.. கொங்கு பெல்ட் பொறுப்பாளராக இருக்கிறார். இதே செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுகவில் இருந்த தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருக்கிறார்.. அவருக்கு மா.செ. பொறுப்பும் தந்திருக்காங்க.. இப்ப செங்கோட்டையன் வந்துட்டாலும் பெரிதாக ஒன்றும் ஆகப் போவதில்லை.. திமுகவுக்கு ஆதாயமும் இல்லை என நினைத்துதான் ‘செங்ஸ்’ பற்றி சிஎம் ஸ்டாலின் ஏற்கனவே ரொம்ப பெரிதாக ஆர்வத்தைக் காட்டாமல் இருந்துட்டார்.. அதே பொசிசிசன்தன் இப்பவும் நீடிக்குது” என்கின்றனர்.

ஓ.. செங்கோட்டையன் என்னதான் பேசப் போறாராம்?

ரொம்பவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார் செங்கோட்டையன். ஆனால் கோபிச்செட்டிபாளையம் அதிமுக ஆபீசில் செப்டம்பர் 5-ந் தேதி செய்தியாளர்களை சந்திக்கும் போது, “நீங்க நினைக்கிற மாதிரி எடப்பாடி அட்டாக் எல்லாம் இருக்காது.. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா எல்லோரையும் ஒன்றாக கட்சியில் சேர்க்கனும்.. அப்பதான் அதிமுக ஜெயிக்க முடியும்னு மட்டும்தான் சொல்லப் போறார்” என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

ஆக புஸ் வானமா?
ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் என ஒவ்வொரு விவகாரமா வருதே.. எடப்பாடி என்ன சொல்கிறாராம்?

நாமும் அதிமுக வட்டாரங்களில் பேசினோம், அவங்க என்ன சொல்றாங்கன்னா, “எடப்பாடிக்கு ஒரு தகவல் வந்திருக்கு.. பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை வெளியேற்றியது இபிஎஸ்தான். இதுக்கு பழிவாங்க, இபிஎஸ்ஸை முதல்வராக விடமாட்டேன்னு சபதம் எடுத்துகிட்டு ‘சதிராடுறாரு’ அண்ணாமலை.. அவருதான் ஓபிஎஸ், டிடிவி தினகரன் எல்லாத்தையும் தூண்டிவிட்டவரு என்பதுதான் அந்த தகவல்.

இதை கிராஸ் செக் செய்துவிட்டு, “தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு இவ்வளவு பாதிப்பையும் ஏற்படுத்துவதே அண்ணாமலைதான்.. அவரால்தான் நம்ம கூட்டணியில் பிரச்சனை” என டெல்லி பாஜக மேலிடத்துக்கு சொல்லிவிட்டாராம் இபிஎஸ்.

ஏற்கனவே நிர்மலா சீதாராமன் சொன்ன தகவலில் டெல்லி பாஜக மேலிடம், அண்ணாமலை மீது கோபத்தில் இருக்கிறது என சொல்லப்படுகிறது.. அத்துடன், இபிஎஸ்ஸும் அண்ணாமலை மீது புகார் அனுப்பி இருக்கிறார்..

இதனால அடுத்தது, பாஜகவில் ‘அண்ணாமலை புயலாக’ இருந்தாலும் ஆச்சரியமில்லை என யூகத்தை கொட்டியபடி டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share