ADVERTISEMENT

கரூர் கொடுந்துயரம்.. செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? – அண்ணாமலை கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

Annamalai questions Senthil Balaji's tension

கரூர் சம்பவத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில் செந்தில் பாலாஜி இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இதற்கிடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஹேமமாலினி தலைமையில் 8 எம்பிகள் அடங்கிய குழு கரூரில் ஆய்வு மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மற்ற இடங்களில் நடக்காத சம்பவம் கரூரில் மட்டும் நடக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்யின் அனைத்து கூட்டங்களிலும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தனது எக்ஸ் பதிவில், “கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில் இன்று ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சாராய அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார். தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது. கூட்டத்தில், திரு. விஜய் அவர்கள் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது தவெக வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது.

ADVERTISEMENT

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை அறியும் குழுவிடம் பெண்மணி ஒருவர், கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன?

கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.

ADVERTISEMENT

யார் எங்கே சென்றார்கள், செல்லவில்லை என்று கேட்கும் தகுதி முதலில் திமுகவிற்கு இருக்கிறதா? கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயம், 66 உயிர்களைப் பலிகொண்ட போது அங்கு போகாத முதலமைச்சர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தி கூட்டணி உடன்பாடுகளுக்கு டெல்லி சென்ற முதலமைச்சர், தற்போது மட்டும் ஓடோடி வந்ததன் பின்னணியை மக்கள் அறிவார்கள்.

நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், முன்னாள் சாராய அமைச்சர் இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share