தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்று (செப்டம்பர் 23) ரசிகர் மன்றம் துவக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, கடந்த 2019ஆம் ஆண்டு அப்பதவியில் இருந்து விலகினார். ஆர்.எஸ்.எஸ் கொள்கை மீது ஆர்வம் கொண்ட அவர் அதற்கு அடுத்த ஆண்டே பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதனையடுத்து 2021ஆம் ஆண்டில் தமிழக பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலை தலைவராக இருந்த காலத்தில், அவர் வார் ரூம் வைத்துக்கொண்டு தனக்கு எதிரானவர்களை கார்னர் செய்வதாக கூறி குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து 4 ஆண்டுகள் அவர் கட்சி தலைவராக பணியாற்றிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனது பதவி ராஜினாமா செய்தார். அவருக்கு பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வழங்கப்பட்டது.
கட்சித் தலைமை பதவியில் இருந்து விலகினாலும், தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு தொடர்ந்து முக்கியத்தும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் அவருக்கு தனி ஆதரவு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக சினிமா மோகத்தை தாண்டி, ஒரு அரசியல் பிரபலமான அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி ஆணைப்பள்ளம் மாரியம்மன் கோவில் அருகில் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தங்கமணிக்கு சொந்தமான நிலத்தில் ’அண்ணாமலை ரசிகர் மன்றம்’ பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் உட்பட 25 பேர் கலந்து கொண்டனர். இந்த ரசிகர் மன்றத்தில் தற்போது பாஜக நிர்வாகிகள் 24 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
மேலும் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டுள்ள இந்த பகுதியானது முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று காலையில், ‘நீங்க தனிக் கட்சி தொடங்கப் போவதாக சொல்லப்படுகிறதே’ என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, ‘தனிக்கட்சி தொடங்கும் போது உங்களிடம் தெரிவிக்கிறேன்’ என்று பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார் அண்ணாமலை.
கடந்த சில நாட்களாவே தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க போவதாக தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது துவக்கப்பட்டுள்ள ரசிகர் மன்றத்தை, பின்னர் நற்பணி மன்றமாக மாற்ற அண்ணாமலை திட்டமிட்டுள்ளாரோ என்ற கேள்வியை கட்சியினரிடையே ஒருசேர எழுப்பியுள்ளது.