தீபாவளிப் பண்டிகை நேரத்தில், ஆசிரியர் களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 17) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பல ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு, தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 27 அன்று அரசாணை எண் 19 வெளியிட்டது திமுக அரசு. ஆனால், இந்தப் பணி நிரந்தரம் குறித்தவற்றை, அரசு ஊழியர்களுக்கான IFHRMS மென்பொருளில் இன்னும் திருத்தம் செய்யவில்லை.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு, IFHRMS மென்பொருளில், பணியிடத்தின் தன்மை, தற்காலிகம் என்றே இருப்பதால், சுமார் 2,000 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவிலை. இது குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர், முதலமைச்சர் தனிப்பிரிவு என பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும், இன்னும் தீர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர்.
அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, அவை முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்துச் சிறிதும் அக்கறை இல்லாமல், கையாலாகாத நிலையில் இருக்கிறது திமுக அரசு. கல்வித் துறை அமைச்சரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனப்பான்மையில் இருந்து வெளியே வரவில்லை. தீபாவளிப் பண்டிகை நேரத்தில், ஆசிரியப் பெருமக்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது எவ்வளவு அசிங்கம் என்பதை, முதலமைச்சரும், கல்வித் துறை அமைச்சரும் உணர்வார்களா?” என தெரிவித்துள்ளார்.