அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு “எனக்கு தனிப்பட்ட முறையில் கோபம், ஆற்றாமை இருக்கிறது.. ஆனாலும் கூட என்னை பொறுத்தவரை கட்சி சொல்வதை கேட்டு செயல்படுபவன் நான்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியிலிருந்த போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அவ்வப்போது கருத்து முரண்பாடு எழுந்து வந்தது. இதன் உச்சகட்டமாக எடப்பாடி பழனிசாமி தற்குறி என கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார் அண்ணாமலை. இது அதிமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் மானமுள்ள அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை ஒரு கூட்டணி கட்சி தலைவராக கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கடுமையாக விமர்சித்தார்.
அதேபோல் சிலுவம்பாளையம் கொலை வழக்கில் தொடர்புடையவர் எடப்பாடி பழனிசாமி என்று சர்ச்சைக்குரிய தடாலடியான கருத்துகளை பொதுவெளியில் பேசினார் அண்ணாமலை. இதையடுத்து அதிமுக பாஜக கூட்டணி முடிவுக்கு வந்ததாக இரு கட்சியின் தரப்பிலும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி உருவாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுகுறித்த அறிவிப்பை பொது நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
இதற்கிடையில் பாஜக தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட அண்ணாமலை சில நாட்கள் மட்டும் அமைதி காத்து வந்தார். தற்போது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெறும் கட்சி விழாக்களில் பங்கேற்று வருகிறார். இன்று கோவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் இந்து முன்னணி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “எடப்பாடி பழனிசாமி தற்குறி.. அவர் முதல்வர் ஆவதற்கு தகுதி இல்லை என்ற விமர்சித்த நீங்கள் இப்போது அவருடன் கூட்டணி வைத்துள்ளீர்களே?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை,” நான் இந்த கட்சியின் தொண்டன். ஒரு தொண்டராக இருக்கும் போது கட்சி முடிவெடுத்திருக்கிறது. தலைவர்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள். அதை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.
அதனால்தான் கடமை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். தலைவர்கள் சொல்லி விட்டார்கள். மோடி அய்யா சொல்லி விட்டார். அதை கேட்பது எனது கடமை. இதில் தொண்டர்கள் நமக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் கட்டுக்கோப்பாக கட்சி இருக்காது . இதனால் அந்த பிரச்சனை முடிந்து விட்டது. இது எங்களுடைய கடமை. தலைவர்கள் சொல்லி விட்டாதால் செய்ய வேண்டியது அண்ணாமலை என்ற தொண்டனுடைய பொறுப்பு.
ஜி.கே மூப்பனார் மறைந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜி.கே.வாசன் அழைத்திருந்தார். மேடையில் இருக்கை போட்டிருந்தபோது ஜி.கே.வாசன் சொன்ன இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன். அதில் அரசியல் எதுவும் எல்லை.
எல்லாரிடத்திலும் எனக்கு அன்பு , பண்பு, பாசம் இருக்கிறது. உங்களுக்கு தெரியும் எனக்கு தனிப்பட்ட முறையில் கோபம், ஆற்றாமை இருக்கிறது. வேறு இடத்தில் இருக்கிறது. திமுகவில் இருக்கிறது என்றால் கூட, ஒரு திமுக அமைச்சரை பார்த்தால் மரியாதை கொடுப்பவன் நான். என்னை பொறுத்தவரை கட்சி சொல்வதை கேட்டு செயல்படுபவன் நான்” என்றார்.