சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், இன்று ஜூலை 31-ல் பணி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 2021-2024-ம் ஆண்டு காலத்தில் பணியாற்றியவர் வேல்ராஜ். கடந்த 2024-ம் ஆண்டு வேல்ராஜின் துணைவேந்தர் பதவி காலம் நிறைவடைந்தது.
அப்போது பணி ஓய்வு பெறும் வயது இல்லாததால் தொடர்ந்து பணியாற்றினார் வேல்ராஜ். இன்று ஜூலை 31-ந் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெற இருந்தார்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில், நிதி முறைகேடு புகாரின் அடிப்படையில் வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பணி ஓய்வு நாளில் வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராவதற்கு முன்னர், அண்ணா பல்கலைக் கழகத்தின் எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார் வேல்ராஜ். அப்போது நிதி முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது புகார். இந்த புகாரின் அடிப்படையில் பணி ஓய்வு பெற இருந்த நாளில் வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த வேல்ராஜ்?
அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த ர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவின் பதவிக் காலம் 2021-ல் முடிவடைந்தது. அப்போது தமிழ்நாட்டு பல்கலைக் கழகத்துக்கு தமிழர் ஒருவரே துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது.
அந்த சூழலில், அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பணிக்கு 160-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதில், அண்ணா பல்கலைக் கழக இயக்குநர், துணை இயக்குநர், துறைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகள் வகித்த வேல்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாகர்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.