கேள்வி எழுப்பிய அங்கன்வாடி ஊழியர்கள் – நழுவிய நயினார், வானதி

Published On:

| By Pandeeswari Gurusamy

மத்திய மாநில அரசுகள் தங்களை அலைக்கழித்தால் என்ன செய்வது என்று போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பிய நிலையில், “உங்களுக்கு வாக்குறுதி கொடுத்தது திமுக அரசு தான், அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் பத்தாவது நாளாக இன்றும் (பிப்ரவரி 12) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே சமையல் செய்து படுத்து உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இன்று நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். நயினார் நாகேந்திரனிடம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், “தங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் சேர்ந்துதான் நிதி ஒதுக்குகிறது. மாநில அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசாவது எங்களது கோரிக்கைகளை ஏற்று நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் “மாநில அரசிடம் கேட்டால் மத்திய அரசிடம் கேளுங்கள் எனக் கூறுகிறார்கள். மத்திய அரசிடம் கேட்டால் மாநில அரசிடம் கேளுங்கள் என்று கூறுகிறார்கள். இப்படி இரண்டு அரசுகளும் அலைக்கழித்தால் நாங்கள் எங்கு செல்வது?” என்று கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “உங்களுக்கு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது திமுக அரசு தான். அவர்களிடம் தான் நீங்கள் முறையிட வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், “நாங்கள் இதர அரசியல்வாதிகள் போல் இல்லை. நாங்கள் சொன்னதைச் செய்வோம்” என்றார்.

தொடர்ச்சியாக கேள்வி எழுப்ப முயன்ற போராட்டக்காரர்களிடம் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், “நீங்கள் கோரிக்கை மனு கொடுங்கள். சட்டமன்றக் கூட்டத் தொடரில் இது குறித்து பேசுவோம்” என தெரிவித்தார். உடனடியாக பாஜகவினர் எங்கிருந்து கிளம்பி விட்டனர்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்கள் இது குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பிய நிலையில், நயினார் நாகேந்திரன் பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share