பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் அக்கட்சியினர் இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸ்க்கு கார்டியோ ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.
ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மருத்துவமனைக்கு சென்ற அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐயா ஐசியுவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இது குறித்த புகைப்படங்களும் வெளியானது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 10) சென்னை உத்தண்டியில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, ஐயா ராமதாஸ் அவர்களை உடனிருப்பவர்கள் ஒரு காட்சி பொருள் போல் வைத்திருப்பதாக கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார். ஐயா 87 வயதை எட்டியதால் சராசரி பரிசோதனைக்கு மருத்துவமனை சென்றிருக்கும் ஐயாவை பாதுகாப்பே இல்லாமல் யார் யாரோ சென்று பார்க்கிறார்கள். நான் வீட்டில் இருக்கும் போது ஐயாவின் பாதுகாப்பு கருதி வராண்டாவை தாண்டி யாரையும் அனுமதிக்க மாட்டேன். ஐயா நன்றாக உள்ளார் அவரை வைத்து நாடகமாடி கொண்டிருக்கிறார்கள். ஐயாவின் உயிரை வைத்து விளையாடிக் கொண்டுள்ளனர். ஐயாவிற்கு ஏதாவது ஒன்று நடந்தால் உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன். அவர்களை சும்மா விட மாட்டேன்” என ஆவேசமாக கூறினார்.